நாகர்கோவில், மே 8: அருமநல்லூர் கண்டளவு பகுதியை சேர்ந்தவர் நாதன் ஜெயக்குமார் (48). நாகர்கோவில் வடசேரி சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட வாகன தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் மதியம் பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் நாகர்கோவில் – புத்தேரி நான்கு வழிச்சாலை அருகில் வரும் போது, அந்த வழியாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் நாதன் ஜெயக்குமார் பைக்குடன் லாரியின் சக்கரத்தில் சிக்கினார். அவர் மீது டாரஸ் லாரி ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் பைக்கில் பின்னால் இருந்த தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த லிங்கேஷ் என்பவரின் 5 வயது மகன் சரண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். சிறுவன் படுகாயத்துடன், வடசேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஏற்கனவே கடந்த வாரம் விபத்து நடந்து ஒருவர் பலியானார். இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி, முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் பலர் திரண்டு, மறியலுக்கு முயன்றனர். அவர்களுடன் இன்ஸ்பெக்டர்கள் காசி பாண்டியன், பாலமுருகன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இறந்து போன நாதன் ஜெயக்குமார் உடலை மீட்டு போலீஸ் வாகனத்திலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து டாரஸ் லாரி டிரைவர் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த செல்வ பீட்டர் (28) என்பவரை கைது செய்தனர். அவர் மீது அதி வேகம் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியது உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால், இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வழிச்சாலைக்கு திரும்பும் டாரஸ் லாரிகள், கனரக வாகனங்கள் அதிக வேகத்துடன் திரும்புகின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post விபத்தில் சுகாதார நிலைய ஊழியர் பலி டாரஸ் லாரி டிரைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு காயமடைந்த 5 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.