செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மாயமான 3 வயது சிறுவனை அரைமணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மகனை பத்திரமாக ஒப்படைத்த காவல்துறையினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பெரிய மணிக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர்(32), தொழிற்சாலை ஊழியர். இவரது மனைவி ரேகா(26). இவர்களுக்கு ஆத்விக்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ரேகா தனது மகன் ஆத்விக்கை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு மளிகை பொருட்களை வாங்கச் சென்றார். பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஆத்விக் மாயமானதைக் கண்டு ரேகா அதிர்ச்சி அடைந்தார். பல்பொருள் அங்காடி முழுவதும் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
மகனைக் காணாமல் தாய் ரேகா கதறி அழுதபடி செய்வதறியாமல் திகைத்து நின்றார். இதனிடையே, செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் அழுதபடி நின்றிருந்த சிறுவனை ரோந்து போலீசார் மீட்டு செங்கல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் டில்லிபாபு குழந்தையை மடியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்தினார். பெண் உதவியாளர் உஷா சிறுவனுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் கொடுத்தார். பின்னர், அழுகையை நிறுத்திய சமாதானம் அடைந்த சிறுவனிடம், பெற்றோர் குறித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது சிறுவன் தெரிவித்த ஒருசில விவரங்களை வைத்து மகனை இழந்த தாய் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அடுத்த அரை மணிநேரத்தில் பெற்றோரை கண்டுபிடித்து சிறுவன் மீட்க்கப்பட்ட தகவலை போலீசார் தெரிவித்தனர். குழந்தை மீட்கப்பட்டதை அறிந்த தாய் ரேகா மற்றும் உறவினர்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனர். உடனே, செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் சிறுவன் ஆத்விக்கை போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர். குழந்தையை பெற்றுக்கொண்ட ரேகா மற்றும் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீரில் காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
The post செங்கல்பட்டில் மாயமான அரை மணி நேரத்தில் மூன்று வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர் appeared first on Dinakaran.