சத்தியமங்கலம்: ஆசனூர் பகுதியில் இன்று அதிகாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில், சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை பலத்த சூறாவளி காற்று வீசியதோடு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அரேப்பாளையம் பிரிவு முதல் கொள்ளேகால் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் சாலையோர மரங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் சாலையில் விழுந்ததால் இன்று காலை முதல் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாவள்ளம், தேவர்நத்தம், கோட்டாடை, குளியாடா, கெத்தேசால், கானக்கரை, கேர்மாளம் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து கேர்மாளம் வழியாக கொள்ளேகால் பகுதிக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இன்று காலை முதல் செல்ல முடியாமல் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவாக மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அதிகாலை சூறாவளி காற்றுடன் மழை appeared first on Dinakaran.