×

ஈரானிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக கேரளா வந்த 6 தமிழக மீனவர்கள்: நடுக்கடலில் கடலோர காவல்படை மீட்டது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மரிய டெனில் (38), ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலை குடியை சேர்ந்த நித்திய தயாலன் (30), வாலாந்தருவையை சேர்ந்த ராஜேந்திரன் (30) மற்றும் கலைதாஸ் (45), அருண் தயாளன் (27), பாசிபட்டினத்தை சேர்ந்த முனீஸ்வரன் (37) ஆகிய 6 மீனவர்கள் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி ஈரானுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். அங்குள்ள முதலாளி சையது சவுது ஜாபரி படகில் மீன்பிடி தொழில் செய்வதற்கு பணியமர்த்தப்பட்டனர். சுமார் ஒன்றரை வருடமாகியும் மீனவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் கேட்டால் அவர்களை தாக்குவது என்று துன்புறுத்தலை கொடுத்துள்ளார். ஆகவே ஈரானிலிருந்து கடலில் பட்டினி கிடந்து சாவதை விட அருகில் உள்ள கத்தார் நாட்டில் சென்று அகதியாக தஞ்சம் அடைவோம் என தீர்மானித்து புறப்பட்டுள்ளனர்.

ஆனால் நடுக்கடலில் கத்தார் கடலோர காவல்படை மீனவர்களை தடுத்து நிறுத்தி கத்தாருக்குள் நீங்கள் அகதியாக வரக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். இதனால் மீனவர்கள், எப்படியாவது இந்தியாவுக்கு செல்வோம் என்று தாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகு மூலமாக இந்தியாவுக்கு புறப்பட்டனர். ஏப்ரல் மாதம் 22ம் தேதி கடல் வழியாக பயணம் செய்தனர். 4வது நாள் மீனவர்களுக்கு உணவுப் பொருட்கள் பாதி வழியில் தீர்ந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு அமெரிக்க அரசு கப்பல் மீனவர்களுக்கு சிறிது உணவும், முதல் உதவி மருந்துகளும் கொடுத்து அவர்களது உயிரை தாங்கிப் பிடிக்க வைத்துள்ளார்கள்.

14 நாட்கள் கடல் வழியாக பயணம் செய்து இறுதியில் இந்திய கடல் எல்லைக்குள் கேரள ஆழ்கடலில் மீனவர்கள் படகு வந்து சேர்ந்தது. அப்போது அவர்கள் படகில் இருந்த டீசல் முழுமையாக தீர்ந்து விட்டது. இதனால் மீனவர்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு தங்களை காப்பாற்றும்படி கேட்டுள்ளார்கள். மீனவர் அமைப்புகள் உடனடியாக இந்திய கடலோர காவல் படையை தொடர்பு கொண்டு நடுக்கடலில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த ஆறு மீனவர்களை மீட்டு தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘அனுபவ்’ என்ற கப்பல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 மீனவர்களையும் மீட்டு கொச்சியில் கரை சேர்த்துள்ளது. மீனவர்களுக்கு உணவும் மருந்தும் அதிகாரிகள் கொடுத்தனர். படகில் டீசல் இல்லாமல் ஆறு மீனவர்கள் நடுகடலில் தத்தளிப்பதை மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம் ஆன்றோ லெனின் இந்திய கடலோர படைக்கு தெரிவித்து மீனவர்களை மீட்க கோரினார்.

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில், ஈரானில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 6 மீனவர்களின் குடும்பத்தினர் கேரள மாநிலம் கொச்சி சென்றனர். பின்னர் அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படாமல் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். ஈரானிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக 6 மீனவர்களும் வந்து சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஈரானிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக கேரளா வந்த 6 தமிழக மீனவர்கள்: நடுக்கடலில் கடலோர காவல்படை மீட்டது appeared first on Dinakaran.

Tags : Iran ,Kerala ,Middle Sea ,NAGARGO ,MARIYA DENIL ,KANYAKUMARI DISTRICT ,KULACHALA ,NITHIYA DAYALAN ,RAMANATHAPURAM DISTRICT ,THIRUPALAI DISTRICT ,RAJENDRAN ,VALANDARUWA ,KALAIDAS ,ARUN DAYALAN ,FASIPATTU Muneiswaran ,Ninathan ,Dinakaran ,
× RELATED கிணற்றில் மூழ்கி மாணவர் பலி