டெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் ஒத்திவைத்தது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், அமலாக்கத்துறை, கெஜ்ரிவால் தரப்பு இடையே காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவை பின்வருமாறு..
கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி : நிபந்தனைகளின் அடிப்படையில் இடைக்கால ஜாமின் வழங்கப்படுவது வழக்கம்தான். முதல்வரின் கையெழுத்து இல்லை என்று கூறி, துணை நிலை ஆளுநர் அரசு கோப்பை திருப்பி அனுப்பி விட்டார்.
நீதிபதிகள் : இடைக்கால ஜாமினில் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டாலும் முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்வது சரியாக இருக்காது.
அபிஷேக் மனு சிங்வி : பதவியிலிருக்கும் முதலமைச்சர் என்பதால் அவருக்கு எந்த தடையும் விதிக்க முடியாது.
நீதிபதிகள் : தேர்தல் நடக்காமல் இருந்திருந்தால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் என்ற கேள்வியே எழுந்திருக்காது. பொதுநலன், நேர்மை பற்றிய பிரச்சனை இது, அரசு மற்றும் பொது விவகாரங்களில் கெஜ்ரிவால் தலையிடுவதை விரும்பவில்லை. எனவே இடைக்கால ஜாமினில் விடுதலை செய்தால் கெஜ்ரிவால் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளக்கூடாது.
அபிஷேக் மனு சிங்வி : கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறையிடம் எந்த ஆதரமும் இல்லை. அமலாக்கத்துறையின் சம்மனுக்கு 5 முறை பதிலளித்துள்ளார் கெஜ்ரிவால்; ஆனால் இடி பதிலளிக்கவில்லை.
நீதிபதிகள் : யாருக்கு வேண்டுமானாலும் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படலாம். கெஜ்ரிவால் அரசியல்வாதி என்பதாலேயே இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று கருதவில்லை. தேர்தல் நடைபெற்று வரும் அசாதாரண சூழலையே இடைக்கால ஜாமீன் குறித்து நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. அரசியல்வாதிகளுக்கு என தனிச்சட்டம் வேண்டும் என்று நீதிமன்றம் கோரவில்லை. இறுதி உத்தரவை உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியும் என்றால் இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியும்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு வந்த போதே, டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மே 20ம் தேதி வரை நீட்டித்தது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்.
The post கெஜ்ரிவால் அரசியல்வாதி என்பதாலேயே இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று கருதவில்லை : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.