நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த 4ம் தேதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார். ஜெயக்குமார் மரண வழக்கு தற்போது வேகமெடுக்கிறது. ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் தொடர்ந்து 2வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. நெல்லை எஸ்.பி. சிலம்பரசன், ஜெயக்குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஜெயக்குமார் வீட்டில் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஜெயக்குமாரின் வாய் மற்றும் தொண்டையில் இரும்புத் துகள்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. பாத்திரங்கள் கழுவும் இரும்பு பிரஷ், இரும்பு துகள்கள் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இரும்பு பிரஸின் பிளாஸ்டிக் கவர் ஜெயக்குமாரின் வீட்டில் உள்ள மாட்டுக் கொட்டகையில் கிடைத்துள்ளது. கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, ஜெயக்குமாரின் வாயில் இருந்து இரும்பு பிரஷ் கைப்பற்றப்பட்டுள்ளதால் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
The post புதிய தடயம் சிக்கியது!: எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் வாயில் இருந்து கைப்பற்றப்பட்ட இரும்பு பிரஷ்..போலீஸ் தீவிர விசாரணை..!! appeared first on Dinakaran.