விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை பிரபலமானது. அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் முதல்நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். சித்திரை மாதத்தில்தான் பெரும்பாலான கோயில் திருவிழாக்கள், காதுகுத்து உள்ளிட்ட சுப விழாக்கள் நடைபெறும்.
இந்த மாதத்தில் கிராம கோயில்களில் பெரும்பாலும் ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவார்கள். இதனால், இந்த மாதத்தில் ஆடு, கோழி விற்பனை சந்தைகளில் களை கட்டும். அதோடு ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு விற்பனையின் போது நல்ல லாபம் கிடைக்கும். இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று விராலிமலை ஆட்டுசந்தை வழக்கம்போல் கூடியது. ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், விவசாயிகள் அதிகாலையிலே சந்தையில் குவிந்தனர்.
இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. ஆடு ரூ.5000 முதல் ரூ.15ஆயிரம் வரை விலை போனது. 5 கிலோ எடை கொண்ட வெள்ளாடு 8 ஆயிரத்திற்கும், 8 கிலோ எடை கொண்ட ஆடு 11 ஆயிரத்திற்கும், 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15 ஆயிரத்துக்கும் விலை போனது. அதே நேரத்தில் விலை அதிகமாக இருந்த போதும், கோயில்களில் நேர்த்திக்கடனுக்கு வெள்ளாடுகள் மட்டுமே பலியிடுவதால் விலையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சென்றதால் வர்த்தகம் சுமார் ரூ.1.50 கோடியை தாண்டியது.
The post விராலிமலை சந்தையில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.