*தடுக்கும் முறைகள் குறித்து தோட்டக்கலை துறை பயிற்சி
ராஜபாளையம் : ராஜபாளையம் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
ராஜபாளையம் சேத்தூர், தேவதானம் பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கோடைகாலம் தொடங்கி விட்டதால் ரூகோஸ் வெள்ளை ஈ, கருந்தலைப்புழு, வாடல் நோய் ஆகியவை தென்னையை மட்டுமில்லாமல் வாழை, பாக்கு போன்ற பயிர்களையும் தாக்குகின்றன.
இது போன்ற அறிகுறிகள் கண்டவுடன் மஞ்சள் நிறம் உடைய பாலித்தீன்களில் ஆமணக்கு எண்ணெய் தடவி ஒட்டுப்பொறியாக 5 அடிக்கு ஒன்றரை அடியளவில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் ஆறடி உயரத்திற்கு தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். விளக்கு பொறிகளை ஏக்கருக்கு இரண்டு வீதம் இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்து கட்டுப்படுத்தலாம். பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்கும் ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தலாம். கிரைசொ பெர்லா எனும் இரை விழுங்கிகளை ஏக்கருக்கு 400 எண்கள் விட வேண்டும்.
பாதிப்புகள் குறித்து பருத்தி ஆராய்ச்சி வேளாண்மை நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் ராகவன், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சுபா வாசுகி ஆகியோர் பல பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை களப்பணியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ரூகோஸ், வெள்ளை ஈ தாக்குதல் கண்டறியப்பட்டன. ஒரு சில தென்னந்தோப்புகளில் போரான் சத்து குறைபாடு தென்பட்டது. ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலித்தீன் தாளால் ஆன ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் மரங்களுக்கு இடையில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்க அறிவுறுத்தப்பட்டது.
விசைத்தெளிப்பானை கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தலாம். என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் உள்ள தென்னை ஓலைகளை ஏக்கருக்கு 100 எண்கள் வீதம், தாக்கப்பட்ட ஓலைகள் மீது இணைத்து கட்டுப்படுத்தலாம். பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என்று விவசாயிகளிடம் விளக்கமளிக்கப்பட்டது. இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துலட்சுமி, தோட்டக்கலை உதவி அலுவலர் சந்தனமாரி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல் appeared first on Dinakaran.