சென்னை: சென்னை ஆவடி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகையை சேர்ந்தவர் பரசுராம். தனியார் வங்கி மேலாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு பரிமளா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தனியார் வங்கி மேலாளர் பரசுராம், கோடை விடுமுறையை கழிப்பதற்காக கடந்த 4ம் தேதி குடும்பத்துடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை பரசுராமின் மனைவி பரிமளா, தனது செல்போனில் கேரளாவில் இருந்தபடியே வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது, வீட்டின் முன்பகுதியில் மர்மநபர் ஒருவர் ஒளிந்திருப்பதாக அருகில் இருந்த உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து உறவினர் சாலமன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில், படுக்கையறையின் பீரோ கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி, நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து உறவினர், பரிமளாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து ஆவடி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 60 சவரனுக்கும் மேற்பட்ட நகைகள் திருடப்பட்டிருப்பது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
The post சென்னை ஆவடி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை; மர்மநபர்கள் துணிகரம்..!! appeared first on Dinakaran.