×
Saravana Stores

வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர சிகிச்சைக்கு கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி

*1962 என்ற எண்ணில் அழைக்கலாம்

*கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

கரூர் : கால்நடைகளுக்கு வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. 1962 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கோடை வெப்பத்தில் இருந்து மாடு, எருமை, ஆடு மற்றும் கோழி உள்ளிட்டவற்றை பாதுகாக்க உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயைத் திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.

வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவதற்கு கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும்.

தண்ணீரின் மீது கலப்பு தீவனத்த சிறிதளவு து£வும் போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும். தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் முலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் உற்பத்தி குறையாமல் இருக்கும். நீர் தெளிப்பான்கள், மின்விசிறிகளை கொட்டகைளில் பயன்படுத்துவதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். அதிகமாக பசுந்தீவனம் கொடுப்பதோடு உலர் தீவனத்தை பகலில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும கொடுக்கலாம்.

கோழிகளுக்கு விடியற்கலை பொழுதிலும், இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி.காம்ளக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம். அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்க வேண்டும். ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 முதல் 12 லிட்டம் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.

தடுப்பூசிகளை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். கோடையில் கிடைக்கும் புரதச்சத்து மிக்க வெல்வேல், கருவேல் உலர் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம். செல்லப் பிராணிகளை காரில் உள்பகுதியில் அடைத்து வைப்பதையும், நேரடியாக வெயில் படுமாறு உலாவ விடுவதையும் தவிர்க்க வேண்டும்.கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனை, மருந்தகங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தாது உப்புக் கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின், அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் 1962 என்ற எண்ணில் அழைத்து மருத்துவ உதவி பெறலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர சிகிச்சைக்கு கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி appeared first on Dinakaran.

Tags : KARUR DISTRICT ,KARUR ,KARUR DISTRICT COLLECTOR ,TANGAVEL ,Dinakaran ,
× RELATED பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை...