கூடலூர் : முதுமலை புலிகள் காப்பக வன பகுதிகளில் இருந்து எல்லை கிராமங்களாக உள்ள தொரப்பள்ளி, குனில்வயல், ஏச்சம்வயல், வடவ வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அகழிகளை கடந்து தண்ணீர் குடிப்பதற்காக வரும் காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். முதுமலை வன எல்லையில் தொரப்பள்ளி முதல் போஸ்பாரை வரை அகழி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதுபோன்று தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் அகழியை ஆழப்படுத்தி சீரமைத்து அதனை ஒட்டி சூரிய ஒளி மின்வேலி அமைக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையடுத்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் தொரப்பள்ளி வனத்துறை சோதனை சாவடி முன்பாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சி தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் சேதமடைந்த அகழிகளை உடனடியாக சீரமைக்க உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுனில் கூறியதாவது: மழைக்காலத்திற்கு முன்பாக ஒவ்வொரு வருடமும் அகழிகளை தூர் வார வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் அகழியை ஒட்டி சூரிய ஒளி மின் வேலி அமைக்க வேண்டும். அகழியை தாண்டி வரும் காட்டு யானைகள் தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர், உணவு இன்றி ஆக்ரோஷமாக காணப்படுகின்றன. இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் இந்த யானைகள் வீடுகளை ஒட்டி உள்ள தண்ணீர் தொட்டிகளை உடைத்து தண்ணீரை குடிக்கின்றன.
விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. கடந்த2 தினங்களுக்கு முன் குனில் வயல் பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை காட்டு யானைகள் விரட்டியதில் அவர் ஓடி வீட்டுக்குள் புகுந்து மயிரிழையில் உயிர் தப்பி உள்ளார். காட்டு யானைகளால் மனித உயிர்கள் பலியாவதற்கு முன்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கையை வனத்துறை மேற்கொள்ள வேண்டும். இன்னும் சில நாட்களில் மழை துவங்கி விடும் என்பதால் மழைக்காலத்தில் அகழியை ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள முடியாது.
எனவே இந்த குறுகிய காலத்திற்குள் அகழியை ஆழப்படுத்தி பாதுகாப்பு பணிகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தியே தொரப்பள்ளி வனத்துறை சோதனை சாவடி முன்பாக போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது வனத்துறையினர் அகழிகள் சீரமைக்கப்படும் என விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து முதுமலை புலிகள் காப்பக கார்குடி வனச்சரகர் விஜய் மற்றும் வனத்துறையினர் கிராம மக்களுடன் சேர்ந்து, சேதமடைந்த அகழி பகுதிகளை பார்வையிட்டு சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
The post முதுமலையில் வறட்சி காரணமாக கிராமங்களுக்குள் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகளால் மக்கள் கடும் அச்சம் appeared first on Dinakaran.