*மோட்டார் மூலம் தொழிற்சாலைக்கு நீர் எடுக்க கலெக்டர் சித்ரா தடை
பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில் எதிரொலியாக அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் விவசாயம், தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை மோட்டார் பம்புகள் மூலமாக எடுக்க வேண்டாம் என கலெக்டர் டாக்டர் எஸ்.சித்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலக்காடு மாவட்டத்தில் கடுமையான வெயில் எதிரொலியாக அணைகளிலும், தடுப்பு அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் குடிநீருக்காக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
41 டிகிரி செல்ஷியஸ் மேலாக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் வெயிலில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டரும், பேரிடர் மீட்புக்குழு தலைவருமான டாக்டர் எஸ்.சித்ரா அறிவித்துள்ளனர். மேலும் அன்றாட வேலைகளில் ஈடுபடுவோர் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரையில் ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நீர் நிலைகளிலிருந்து விவசாயத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீரை மோட்டார் பம்புகள் மூலமாக எடுக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.சித்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றை உள்ளாட்சி அமைப்பினரும், நீர்வளப்பாசனத்துறை அதிகாரிகள் கண்காணித்து குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். நீர்நிலைகளில் தற்போது நிரம்பியுள்ள தண்ணீர் மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மலம்புழா, காஞ்ஞிரப்புழா, போத்துண்டி, சிறுவாணி, மீன்கரை, சுள்ளியாறு, மங்கலம் ஆகிய அணைகளில் தண்ணீர் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடமுடியாத அபாயம் நிலவுகிறது. தற்போது குடிநீருக்கு மட்டுமே அணைகளில் தண்ணீர் உள்ளது.
இவற்றை சரிவர பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்தவிதமான காரணத்தாலும் ஆற்று தண்ணீர், அணை தண்ணீர், ஆறுகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை தண்ணீரை விவசாய பாசனத்திற்கோ, தொழிற்சாலை வேலைப்பாடுகளுக்கோ, கட்டுமான பணிகளுக்கோ எடுக்கக்கூடாது, மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சித்ரா எச்சரித்துள்ளார்.
The post பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில் எதிரொலி; அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது appeared first on Dinakaran.