×
Saravana Stores

குமரியில் அடுத்தடுத்து விபத்து 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் பரிதாப சாவு

*நீட் தேர்வு எழுதி சென்ற 2 மாணவிகளும் படுகாயம்

பூதப்பாண்டி : குமரியில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்களில் ஒரு பெண், 3 வாலிபர்கள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் நீட் தேர்வு எழுதி சென்ற 2 மாணவிகளும் காயம் அடைந்தனர்.குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த முக்கடல் எம்ஜிஆர் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அவரது மகன் அனீஸ் (24). திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுபின் (17). 2 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். நேற்று முன்தினம் மாலை 2 பேரும், தாழக்குடி குளத்தில் குளித்து விட்டு அனீசுக்கு சொந்தமான பைக்கில், அனீஸ் விட்டுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.

ஆண்டித்தோப்பிலிருந்து துவரங்காடு நோக்கி வரும் போது பூதப்பாண்டி அரசு மருத்துவமனை அருகே வைத்து எதிரே வந்த வேன் மோதியதில், பைக்கில் இருந்த அனீஷ், சுபின் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். படுகாயம் அடைந்திருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அனீஷ், சுபின் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து சுபின் தந்தை அளித்த புகாரின் பேரில் வேனை ஓட்டி வந்த கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (31) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் அடுத்தடுத்து 2 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குலசேகரம் : கோதையாறு மின் உற்பத்தி நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் ஹரிபாலன். மின் வாரிய பணியாளர். இவரது மகள் அனுக்கிரஹா (18). இவரது தோழி கேரள மாநிலம் காட்டாக்கடை பூலச்சல் பகுதியை சேர்ந்த ஜான்சி (17). 2 பேரும் தற்போது பிளஸ் 2 முடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இ்ருந்தனர். இவர்களுக்கு அஞ்சுகிராமம் அருகே உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று முன் தினம் காலை அனுக்கிரஹாவும், ஜான்சியும் ஒரே ஸ்கூட்டரில், தேர்வு மையத்துக்கு வந்தனர். தேர்வு முடிந்து மாலை மீண்டும் அதே ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டனர். அனுக்கிரஹா பைக்கை ஓட்டினார். ஜான்சி பின்னால் அமர்ந்திருந்தார். இரவு 7 மணியளவில் குலசேகரம் வெண்டலிக்கோடு அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த குலசேகரம் புல்லத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (48) என்பவர் ஓட்டி வந்த பைக், மாணவிகள் வந்த ஸ்கூட்டருடன் மோதியது.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்களில் ரமேஷ், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற இரு மாணவிகள் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் இறந்தார். மாணவிகள் 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுசீந்திரம் : நாகர்கோவில் அருகே உள்ள புத்தன்துறை செம்பொன்கரை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜெயா (52). சம்பவத்தன்று இவர், தனது மகன் கார்த்திக் (20) என்பவருடன் பைக்கில் மேலகிருஷ்ணன்புதூர் – ஈத்தாமொழி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். மேலகிருஷ்ணன்புதூர் பத்ரகாளியம்மன் கோயில் அருகே வரும் போது, அந்த வழியாக வந்த சங்கரகுமார் (39) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர்கள் மீது மோதியது.

இதில் ஜெயா தூக்கியெறியப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து, சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த சங்கரகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post குமரியில் அடுத்தடுத்து விபத்து 3 வாலிபர்கள் உள்பட 4 பேர் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Badugayam Bhuthapandi ,
× RELATED தீபாவளி பண்டிகையையொட்டி மலர்கள்...