சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சியில் தாகத்தை தணிக்க தொட்டிகளில் காட்டு யானைகள் நீர் அருந்தி மகிழ்ந்த காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்புமாறு வனத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குன்றி வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேடர் கண்ணப்பர் வேட்டை தடுப்பு முகாம் அருகே உள்ள தொட்டியில் வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளதால் காட்டு யானைகள் கூட்டத்துடன் அப்பகுதியில் முகாமிட்டு தண்ணீரை தும்பிக்கையால் உறிஞ்சி குடித்தும், உடல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளித்தும் மகிழ்ந்தன. இந்நிலையில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிகழ்வுகள் குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தொட்டிகளில் நீர் அருந்தி மகிழ்ந்த காட்டு யானைகள் appeared first on Dinakaran.