×

ஆரணியில் அக்னி வசந்த விழா தீக்குண்டத்தில் தவறி விழுந்த 4 பெண்கள் காயம்

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தில் பாஞ்சாலியம்மன் சமேத தர்மராஜா கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவுடன் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. காலை நடந்த துரியோதனன் படுகளத்தில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து மாலையில் தீ மிதி விழா நடைபெற்றது. இதில் காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடப்பாக்கத்தை சேர்ந்த கலைவாணி(66), ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்த லட்சுமி(42),சென்னை ஆர்.கே.பேட்டையை சேர்ந்த ஜெயந்தி(66) உள்பட 4 பேர் தீக்குண்டத்தில் தவறி விழுந்தனர்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த 4 பேரையும் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆரணி டவுன் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆரணியில் அக்னி வசந்த விழா தீக்குண்டத்தில் தவறி விழுந்த 4 பெண்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Arani Agni Vasant festival fire accident ,Arani ,Panchaliyamman ,Sametha Dharmaraja ,Arani Koshapalayam ,Tiruvannamalai district ,Agni Vasantha festival ,Duryodhana Padukalam ,Dimithi ,Arani Agni Vasantha Festival ,
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...