*பெற்றோர்களிடம் ஒப்படைப்பு
சேலம் : சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றித்திரிந்த 43 சிறுவர்களை போலீசார் மீட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் மீட்பு நடவடிக்கையை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுமமும், சைல்டு லைன் அமைப்பினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். ரயில்வே ஸ்டேஷனை பொறுத்தளவில், ரயில்வே பாதுகாப்பு படையுடன் (ஆர்பிஎப்) இணைந்து சைல்டு லைன் அமைப்பினர், உதவி மையத்தை ஏற்படுத்தி, தனியாக வரும் சிறுவர், சிறுமிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கின்றனர்.
குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காகவும், பிற மாநிலங்களுக்கு குழந்தை தொழிலாளர்களாக அழைத்துச் செல்லக்கூடாது என்பதற்காகவும் பிளாட்பார்ம்களில் ரோந்து சுற்றி வந்து, தனியாக சுற்றித்திரியும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை மீட்டு விசாரிக்கின்றனர். சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஓசூர், தர்மபுரி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில்வே ஸ்டேஷன்களில் வேலைக்கு வந்த 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் அதிகளவு மீட்கப்பட்டுள்ளனர்.
ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், ஓட்டல்களில் பணியாற்ற 15 முதல் 17 வயதுள்ள சிறுவர், சிறுமிகளை சிலர் அழைத்து வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன்களில் ஆர்பிஎப் போலீசாரின் கண்காணிப்பை பார்த்தும் அவர்களை அங்கேயே விட்டு விட்டுச் செல்கின்றனர். மீட்கப்படும் சிறுவர், சிறுமிகளை சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தபின், அவர்கள் உரிய விசாரணை நடத்தி பெற்றோரை வரவழைக்கின்றனர். அவர்களிடம், 18 வயது ஆவதற்கு முன் வேலைக்கு குழந்தைகளை அனுப்பக்கூடாது என்றும், பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலை தேடி வரும் நபர்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பலரும் வந்து சிக்குகின்றனர். அப்படிப்பட்டவர்களை மீட்டு சைல்டு லைன் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கிறோம். பிறகு பெற்றோரை வரவழைத்து ஒப்படைக்கிறோம். நடப்பாண்டில் இதுவரை சேலத்தில் 3பேரும், தர்மபுரியில் 3 பேரும், ஓசூரில் 4பேரும், காட்பாடியில் 16 பேரும், ஜோலார்பேட்டையில் 17 பேரும் என மொத்தம் 43சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உரிய விசாரணைக்கு பின் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்,’’ என்றனர்.
The post சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் சுற்றிய 43 சிறுவர்கள் மீட்பு appeared first on Dinakaran.