சென்னை: 5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலியாக, சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது. நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயம் அடைந்த சிறுமி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
நாய்களின் உரிமையாளர் புகழேந்தி சிறுமியின் மருத்துவ சிகிச்சை செலவை ஏற்பதாக தெரிவித்தார். இந்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலியாக, சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 120க்கும் மேற்பட்ட பூங்காக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்க வேண்டும். கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பூங்காவிற்குள் உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை. ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மற்றும் பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும். இவை அனைத்தையும் பூங்காவின் காவலர் கடுமையாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் இந்த சுற்றறிக்கை நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலி!: சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு மாநகராட்சி புதிய உத்தரவு..!! appeared first on Dinakaran.