திருச்சி. மே 7: இந்தியாவின் ரயில்வே மண்டலத்தில் தெற்கு மண்டலத்தில் அமைக்கப்பட்ட 6 கோட்டங்களில் தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய கோட்டம் என்றால் அது திருச்சி கோட்டம் தான். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1853 ஆண்டுகளில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு கிரேட் சதர்ன் ஆப் இந்தியா ரயில்வே நிறுவனம் நிறுவப்பட்டது. 1859ம் ஆண்டு நாகப்பட்டினம் மற்றும் திருச்சிக்கு இடையே முதல் பாதை அமைக்கப்பட்டது. திருச்சி கோட்டத்தின் கீழ் தஞ்சாவூர், விழுப்புரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, விருத்தாசலம், அரியலூர், திருவாரூர், மன்னார்குடி, வேளாங்கண்ணி, ரங்கம், சிதரம்பரம், நீடாமங்கலம், காரைக்கால் உள்ளிட்ட வழித்தடங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் மொத்தம் 11 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை தென்மண்டலத்தில் அமைந்துள்ள 3 ரயில்வே பணிமனைகளில் மிகப்பெரிய பணிமனையாகும். கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கில பொறியாளர்களால் வடிவைக்கப்பட்டு, 1926ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1928ல் கட்டி முடிக்கப்பட்டது. 97 வருடங்களை கடந்து இன்றும் செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பணிமனையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானாவர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட பெரிய ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு என்று அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் பொன்மலை ரயில்வே பணிமனை ஊழியர்களுக்கு என்று அதே பகுதியில் குடியிருப்புகளை இலவசமாக கட்டிக்கொடுத்தது. அதேபோல் ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு என்று ரயில் கோட்டத்திற்கு அருகே உள்ள பகுதிகளை தேர்வு செய்து அவர்களுக்கான குடியிருப்புகளை கட்டிக்கொடுத்தது. அதிலும் இந்த குடியிருப்புகளில் ஏ,பி,சி என்ற பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, ஏ பிரிவு அதிகாரிகளுக்கான குடியிருப்பாகவும், பி பிரிவு அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும், சி பிரிவு இதர பணியாளர்களுக்கும் என பிரித்து வடிவமைக்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே நிர்வாகம் கட்டிகொடுத்துள்ள குடியிருப்புகளில் வசித்து வந்தனர். ஆனால் நாளடைவில் அரசாங்கம் இந்த குடியிருப்புக்கு ஒரு குறைந்தபட்ச வாடகையை நிர்ணயம் செய்தது. எனவே இதில் வசித்து வந்த பெரும்பாலானவர்கள் தங்களுக்கு என்று நகரின் மையப்பகுதியிலும், அதனை சுற்றியும் உள்ள இடங்களில் சொந்தமாக வீடுகளை கட்டிக்கொண்டு அந்த குடியிருப்புகளை விட்டு வௌியேறினார்கள். அதன்பின் அந்த குடியிருப்புகள் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்டது. அந்த குடியிருப்புகள் 75ம் அதற்கும் கூடுதலான ஆண்டுகளை கடந்தும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அதில் பெரும்பாலும் ஏ மற்றும் பி பிரிவு குடியிருப்புகளில் இன்றும் ஊழியர்கள் வசித்து வருந்தாலும், சி பிரிவில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பு மோசமான நிலையில் இருப்பதால், இன்று பணிக்கு வருபவர்கள் அதில் வந்து தங்கி வசிக்க விருப்பம் இல்லாமல் அவர்கள் சொந்த குடியிருப்புகளில் இருந்து தற்போது பணிக்கு வந்து செல்கின்றனர்.
இன்றைய நிலையில் அந்த குடியிருப்புகள் நிலை குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்… பொன்மலை ரயில்வே பணிமனை பகுதியில் மட்டும் சுமார் 100 வருடங்களுக்கு முன்பும், ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் காலகட்டங்களில் என மொத்தம் 2652 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அதில் 1082 குடியிருப்புகள் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாக அந்த குடியிருப்புகள் கைவிடப்பட்டு கிடந்தது. அதனால் நாளுக்கு நாள் குற்றசம்பவங்கள் நடக்கும் கூடாரமாக இந்த கைவிடப்பட்ட குடியிருப்புகள் மாறியது. தற்போது அந்த குடியிருப்புகளில் முதல்கட்டமாக 896 குடியிருப்புகளை அகற்றுவதற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, அதில் 764 குடியிருப்புகள் இடித்து தரைமட்டமாக்கபட்டுள்ளது. மீதம் உள்ள 132 குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மீதம் உள்ள 186 குடியிருப்புகளுக்களை இடிப்பதற்கான ஒப்பந்தபுள்ளிகள் விரைவில் கோரப்படும்.
அதேபோல் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கல்லுகுழி ரயில்வே குடியிருப்பில் 50 வருடங்களை கடந்தும், அதற்கு பிறகும், என மொத்தம் 1318 குடியிருப்புகள் உள்ளது. இதில 537 குடியிருப்புகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. 554 குடியிருப்புகள் யாரும் பயன்படுத்த முடியாமல் கைவிடப்பட்டிருந்ததால், அவற்றை இடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக 128 குடியிருப்புகள் இடிப்பதற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அதில் 109 குடியிருப்புகள் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 19 குடியிருப்புகள் இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மீதம் உள்ள 257 குடியிருப்புகளும் இடிப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் விரைவில் கோரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இடிக்கப்படும் வீடுகளில் இருந்து பயன்படுத்தகூடிய நிலையில் உள்ள செங்கல், கருங்கல், வீட்டின் கதவு, பலகை, இரும்பு, பொருட்களை பாதுகாப்பாக எடுத்து ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் விற்பனை செய்து வருகிறது என்று கூறினர்.
The post பொன்மலை பணிமனையில் ரயில்வே குடியிருப்பு வீடுகள் இடித்து அகற்றம்: பழுதடைந்து சேதமடைந்ததால் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.