திருவாரூர், மே 7: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.08 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் மாதம் 1ந் தேதி துவங்கி 22ந் தேதி வரையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 439 மாணவர்களும், 6 ஆயிரத்து 794 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 233 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4 ஆயிரத்து 913 மாணவர்களும், 6 ஆயிரத்து 473 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 386 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 93.08 சதவிகித தேர்ச்சியாகும். மேலும் கடந்தாண்டை விட 1.62 சதவிதம் தேர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் மாநில அளவில் 29வது இடத்திலிருந்து நடப்பாண்டில் ஓரிடம் முன்னதாக 28 வது இடத்தை இந்த மாவட்டம் பிடித்துள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் கொடரச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி 580 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், பூந்தோட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிஷாபானு 579 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், உள்ளிக்கோட்டை அரசு மேல்லைப்பள்ளி மாணவி கௌசல்யா 574 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் அரித்துவாரமங்கலம், கோவிந்தகுடி, பெருகவாழ்ந்தான், புதூர், புத்தகரம், மகாதேவபட்டினம், பேரையூர், திருத்துறைபூண்டி, அச்சுதமங்கலம், பாளையகோட்டை, திருமக்கோட்டை ஆண்கள் பள்ளி, திருமக்கோட்டை பெண்கள் பள்ளி மற்றும் சவளக்காரன் அரசு ஆதிதிரவிடர் நலப்பள்ளி என மொத்தம் 13 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.08 சதவீத மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.