தர்மபுரி, மே 7: தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், போதைப்பொருட்கள் தடுப்பு மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக, துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் சாந்தி பேசியதாவது: பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாவட்ட மனநல திட்டத்தின் கீழ், குடிபோதை மற்றும் மீட்பு மையம், 10 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் 10 படுக்கை வசதிகள் தரம் உயர்த்தப்பட்டு மது, கஞ்சா மற்றும் இதர போதை பொருட்களால் பதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்க தயாராக உள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 20 படுக்கை வசதிகள் கொண்ட குடிபோதை மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் 20 படுக்கை வசதிகள் தரம் உயர்த்தப்பட்டு, போதை பொருட்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு இருக்கும் எனில், விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து, போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருந்துகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் கடைகளில், அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் மீது, சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், போதை மருந்து தடுப்பு பிரிவு தொடர்பு எண்களை, அனைத்து மருந்து கடைகளிலும் வைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதைப்பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மது மற்றும் போதை பொருட்களால் பாதிக்கப்பட்டவர்கள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள மனநல மையங்களை அனுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், டிஆர்ஓ பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) மகேஷ்வரி, தேசிய நல குழுமம் மற்றும் தேசிய நியமன அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள், மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post போதை பொருட்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.