ஒட்டன்சத்திரம், மே 7: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெளிமாநில வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிரபலமான காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் காய்கறிகளில் 70 சதவீதம் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள தேவத்தூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, வடகாடு, பெத்தேல்புரம், கண்ணனூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் இந்தாண்டு தக்காளி சாகுபடி செய்தனர்.
ஆனால்,கடும் வறட்சி காரணமாக விளைச்சல் குறைந்து, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதேசமயம் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையான 14 கிலோ எடை தக்காளி பெட்டி தற்போது ரூ.130 முதல் ரூ.150 வரை மட்டுமே விலை போகிறது. வரத்து அதிகரித்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.