×

மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே பழைய விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மதுரவாயல் அடுத்த வானகரம், பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான இடத்தில் திருவிழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு உபகரணங்கள், ராட்டினம் மற்றும் ஆக்டோபஸ் ராட்டினம் உள்ளிட்ட பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறன.

இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென இந்த கிடங்கில் இருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்து, விளையாட்டு உபகரணங்கள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மதுரவாயல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது வெயிலின் தாக்கமும், நெருப்பின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அந்த கிடங்கில் இருந்த பழைய விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. அதுமட்டுமின்றி இதன் அருகிலேயே பெட்ரோல் பங்கும் இருந்த நிலையில் தீ அந்த பகுதிக்கு பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Poontamalli ,Vanakaram ,Poontamalli highway ,
× RELATED மதுரவாயலில் பரபரப்பு அடுத்தடுத்து 4...