கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசனும் ஆரம்பமாகிவிடும். முக்கனிகளில் முதல் கனியாக இருக்கும் மாம்பழத்தின் வாசனை எங்கிருந்தாலும் நம்மை சுண்டி இழுத்து சாப்பிட அழைக்கும். மாம்பழங்களை பிடிக்காதோர் யாருமே இருக்க மாட்டார்கள். இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் ருமானி, அல்போன்சா, நீலம், செந்தூரா, பங்கனபள்ளி உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.ஒவ்வொரு மாம்பழத்திற்கும் ஒவ்வொரு டேஸ்ட் உள்ளது. மாம்பழங்களில் வெறும் சுவை மட்டும் அல்ல ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளது.
இதனால், மாம்பழம் சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. பொதுவாக மாம்பழங்கள் தானாக பழுக்க வேண்டும். சிலர் அதை அரிசி டிரம்மில் போட்டு வைப்பார்கள், சிலர் வைக்கோல் போட்டு அதில் மாம்பழங்களை வைத்து பழுக்க வைப்பார்கள். இதுதான் இயற்கையானது. இதனால் எத்தனை மாம்பழங்களை சாப்பிட்டாலும் உடலுக்கு ஒன்றுமே ஆகாது. ஆனால், மாம்பழங்களை மக்கள் அதிகளவில் வாங்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களின் உயிர்களுடனே சில வியாபாரிகள் விளையாடுகின்றனர்.
அதாவது, மாம்பழங்கள் செங்காயாக இருக்கும் போதே அதை பழுக்கவைக்க ரசாயன கார்பைடு கல்லை வைத்துவிடுகிறார்கள். அப்படி பழுக்க வைக்கும் மாம்பழங்கள் உடலுக்கு பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை தருவதாக உள்ளது. இதுபோன்ற மாம்பழங்களை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்று போக்கு, அஜீரணம், ஒவ்வாமை உள்ளிட்ட உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் மாம்பழங்களை கடைகளில் வாங்கும் போது அவை கல்லில் வைத்து பழுக்காதவைகளா என பார்த்து வாங்கி உண்ண வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாம்பழங்கள் கல் வைத்து பழுக்க வைத்ததா? அல்லது இயற்கையாக பழுத்த மாம்பழங்களா? என்பதை எப்படி கண்டறிவது என்பது தான் இப்போது மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கல் வைத்த மாம்பழங்களை கண்டுபிடிப்பது எளிது என்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
அதாவது, கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பார்ப்பதற்கு எந்த காயங்களும் இன்றி அழகான வடிவத்தில் இருக்கும். பழம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், ஒரு சில இடங்களில் கறுப்பாக புள்ளிகள் அல்லது கருகியது போல் இருக்கும். பழம் பழுத்திருப்பது போல் இருந்தாலும், சாப்பிடும் போது ருசியாக இருக்காது. பழத்தை வாங்கிச் சென்ற இரண்டு நாட்களிலேயே அழுகிவிடும்.
ஆனால், இயற்கையாக பழுத்த பழுங்கள் சற்று காயப்பட்டு இருக்கும்.
அவை முழுவதுமாக மஞ்சள் நிறத்துடனும், சற்று இளஞ்சிவப்பு நிறமும் கலந்திருக்கும். இயற்கை முறையில் பழுக்கும் பழங்களில் கடைசியாக தான் காம்புப் பகுதி பழுக்கும். ஆனால், செயற்கை முறையில் அனைத்தும் ஒரே நேரத்தில் மஞ்சள் நிறமாகி இருக்கும். கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழத்தை கையில் எடுத்துப் பார்த்தால் சூடாக இருக்கும். வழக்கமாக ஒரு பழம் பழுக்க வேண்டும் என்றால் 5 கட்ட பிராசஸ் உள்ளது. முதலில் பழம் சாப்ட் ஆகும். வாசனை வரும். இறுதியாக கலர் மாறும்.
ஒரு பழம் நார்மலாக பழுத்த பழம் என்றால் அறுக்கும் போது சாப்ட் ஆக இருக்கும். செயற்கையாக கல் வைத்து பழுக்க வைத்தால் மர மரவென இருக்கும். சுவையும் புளிப்புத் தன்மையாக இருக்கும். நார்மலா இருக்காது. இதை பொதுமக்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு பழத்தை அறுக்கும் போது அதன் விதையை ஒட்டி வெள்ளையாக இருந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழம். இயற்கையாக பழுக்கவில்லை என்பதை காட்டுகிறது.
இப்படி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிய பல வழிகள் உள்ளது. எனவே, இதை கண்டறிந்து அதன் பின்பே மாம்பழங்களை சாப்பிட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி வருகிறது. இயற்கையில் மாம்பழங்கள் பழுப்பதற்கு மரத்தில் சுரக்கும் எத்திலின் தான் காரணம். இந்த எத்திலின் திரவம் ரசாயனக் கடைகளில் கிடைக்கும். அவற்றை மாங்காய்களின் மீது தெளித்து பழுக்க வைக்கலாம்.
இந்த முறை அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும். இந்த முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் இந்த முறையில் மாம்பழங்கள் பழுப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும். இதனால் விரைவாக மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு கார்பைடு கற்களை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். சில்லரை வியாபாரிகளை விட, மொத்தமாக பழங்களை கொள்முதல் செய்து குடோன்களில் வைத்திருக்கும் பெரும் முதலாளிகளே இதனை கொள்ளை லாபம் ஈட்டும் வகையில் செய்கின்றனர்.
இந்த முறையில் கார்பைடு கற்களை சிறு துண்டுகளாக்கி மாங்காய்களின் இடையே வைத்து விடுவார்கள். அந்த மாங்காய்கள் 6 மணி நேரங்களிலேயே தோல் மஞ்சள் நிறமாகி பழுத்தது போல் மாறிவிடும். இவற்றை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மாம்பழங்களை சோதனையிட்டு அவை கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பறிமுதல் செய்து அழிப்பது வழக்கமானது தான்.
ஆனால், எத்தனை சோதனை செய்து குற்றங்களை தடுத்தாலும் எப்படியாவது கல் வைத்து பழுத்த மாம்பழங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடை காலம் தொடங்கிய நிலையில், பெரிய மண்டிகளில் ரசாயன கற்களை வைத்து மாம்பழங்களை சிலர் பழுக்க வைக்கிறார்கள். ஆனால், அந்த கல்லிற்கு பதிலாக குறைந்த அளவிலான எத்தலினை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
இதிலிருந்து வரும் வாயு மூலம் பழங்கள் பழுக்கும். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டிப்பாக சுவையாக இருக்காது. புளிப்பாக இருக்கும். மாம்பழங்கள் பொதுவாக அடிப்பகுதியில் இருந்து மேலே உள்ள காம்பு பகுதி நோக்கித்தான் பழுக்கும். எனவே பழம் அப்படி இருக்கிறதா என பார்க்க வேண்டும். பழத்தின் வாசனையும் மூக்கை துளைக்கும் வகையில் இருக்கும். இப்படி இருந்தால் அது இயற்கையான முறையில் பழுக்க வைத்த பழம் என தெரிந்து கொள்ளலாம்.
மேலும் மாம்பழங்களை வாங்கி வந்து ஒரு பக்கெட் தண்ணீரில் போட வேண்டும். எந்த பழம் அடியில் சென்று நிற்கிறதோ அது இயற்கையான முறையில் பழுத்தது. எது மேலே மிதக்கிறதோ அது செயற்கையான முறையில் பழுக்க வைத்தது என்பதை கண்டறியலாம். மாம்பழத்தின் சதை பகுதியை மட்டுமே சாப்பிட வேண்டும். அதன் தோலை சாப்பிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
* புற்று நோய் எச்சரிக்கை
கார்பைடு கல் வைத்து பழுத்த பழங்களை சாப்பிடும்போது வயிற்று வலி, உடல் உபாதைகள், தலைவலி, உடல் சூடு, மயக்கம், தலை சுற்றுதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அத்துடன் கார்பைடு பழங்களுக்குள் ஊடுருவிச் சென்றிருப்பதால் அதிக பழங்களை சாப்பிடும் போது, தீராத வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
இதனால் சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பழங்கள் பார்ப்பதற்கு கண்ணுக்கு அழகாக இருக்கிறது என்பதற்காக வாங்கி உண்டுவிட்டு அல்லல்படக் கூடாது. அவற்றை நன்கு அறிந்து இயற்கை முறையில் பழுத்ததா எனக் கண்டறிந்து வாங்குவது உடல்நிலைக்கு நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
* வாசனை மூலமும் கண்டறியலாம்
செயற்கையாக ரசாயனக் கல் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் சிலவற்றைச் சாப்பிடும் போது நாக்கில் சுர்ரென்று ஒருவகை எரிச்சல் ஏற்படும். மாம்பழ வாசனை அந்த அளவுக்கு இருக்காது. ஆனால், இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் இயல்பாகவே வாசனை நீண்ட தொலைவிற்கு வீசும். முகர்ந்து பார்த்தால் நறுமணம் இருக்கும். பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது என்ற சந்தேகம் இருந்தால் உணவுப்பாதுகாப்புத்துறைக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
* கிரிமினல் வழக்கு பதியப்படும்
கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதை உணவு பாதுகாப்புத்துறை தடை செய்துள்ளது. எனவே இது போன்று பழுக்க வைக்கும் விற்பனையாளர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் வழி வகை உள்ளது. அவர்கள் மீது நேரடியாக வழக்குப்பதிவும் செய்யலாம். சாம்பிள் எடுத்து அனுப்பி அதில் பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்டால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் வழிமுறை உள்ளது. எனவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
* கொழுப்பு பிபியை குறைக்கும்
நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது. இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழ சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்னையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்னைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
The post களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து appeared first on Dinakaran.