கூடுவாஞ்சேரி: காட்டூர்-அண்ணா நகர் சாலை நந்திவரம் பெரிய ஏரியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த குப்பை கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சியில், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அண்ணா நகர், விநாயகபுரம், மயிலி நகர், கோகுலம் காலனி, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காட்டூர்-அண்ணா நகர் சாலை ஓரத்தில் ஏரியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூரில் இருந்து அண்ணா நகர் செல்லும் 2 கிலோ மீட்டர் கொண்ட பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டியபடி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நந்திவரம் பெரிய ஏரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் மற்றும் ஆடு, மாடு, கோழி, மீன் இறைச்சிகளின் கழிவுகளை வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இரவு நேரங்களில் வீடுகளில், வணிக வளாகங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுநீரை லாரிகளில் கொண்டு வந்து ஊற்றிவிட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அவலநிலையில் உள்ளது.
குறிப்பாக, ஏரி நீர் மாசுபடிந்துள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஏரியை அசுத்தப்படுத்தும் நபர்களை கண்டறிந்து அரசு உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
The post காட்டூர்-அண்ணா நகர் சாலை ஓரத்தில் நந்திவரம் பெரிய ஏரியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.