×
Saravana Stores

மாமல்லபுரம் அருகே எச்சூர் கிராமத்தில் பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்: பொதுமக்கள் அவதி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே எச்சூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் இல்லாமல் விஏஓ அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஊராட்சியில் 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, ரேஷன் கடைக்கு அருகே விஏஓ அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், பட்டா – சிட்டா, வாரிசு சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று மற்றும் முதல் பட்டதாரி சான்றுகளை பெறுவதற்காக அரசு இ-சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்கின்றனர்.

ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட சான்றுகளை சரி பார்ப்பதற்காக விஏஓ அலுவலகம் வந்து பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விஏஓ அலுவலகம் சில நாட்களாக பூட்டு போட்டு பூட்டியே இருப்பதால் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தற்போது, அறுவடை நேரம் என்பதால், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு அடங்கல் வாங்க விவசாயிகள் விஏஓ அலுவலகம் சென்றால் அலுவலகம் மூடியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.

இதனால், விஏஓவை எதிர்பார்த்து காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், கிராம உதவியாளரும் ஓராண்டாக வரவில்லையென புகார் எழுந்துள்ளது. இதேநிலை, நீடித்தால் லாபம் இல்லாமல் அறுவடை செய்த நெல்லை நஷ்டத்திற்கு தான் போட வேண்டும் என விவசாயிகள் குமுறுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு தினமும் விஏஓ அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘எச்சூரில் உள்ள விஏஓ அலுவலகம் சென்றால் எப்போதுமே பூட்டியே கிடக்கிறது. விஏஓவை செல்போனில் தொடர்பு கொண்டால் எடுப்பதில்லை, அப்படி எடுத்தாலும் நான் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் முக்கியமான வேலையில் இருக்கிறேன். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங்கில் உள்ளேன் என்று போனை கட் செய்து விடுகிறார். தொடர்ந்து, தொடர்பு கொண்டால் போனை எடுப்பதில்லை.

இதனால் ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட பல்வேறு சான்றுகளை பெற முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது, அறுவடை பணி நடந்து வருவதால் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அறுவடை செய்த நெல்லை கொண்டு செல்ல அடங்கல் வாங்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.’ என கூறினர்.

* ஓராண்டாக அலுவலகம் வராத கிராம உதவியாளர்.
எச்சூர் கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்திற்கு கிராம உதவியாளரை நியமித்து ஓராண்டாகியும், கிராம உதவியாளர் இன்னும் விஏஓ அலுவலகம் வராமல் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம் மட்டும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. எனவே, எச்சூர் கிராமத்திற்கு புதிய கிராம உதவியாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post மாமல்லபுரம் அருகே எச்சூர் கிராமத்தில் பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : VAO ,Echur village ,Mamallapuram ,Echur ,Echur panchayat ,
× RELATED ரூ.200 ‘ஜிபே’ செலுத்தினால் பிறப்பு, சாதி...