×
Saravana Stores

அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர் விட்டும் கட்டுமான பணி துவங்காமல் ஒப்பந்ததாரர் அலட்சியம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பட்டிப்புலம் கிராமத்தில் பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய அங்கன்வாடி மையம் கட்ட டெண்டர் விட்டும் பணி துவங்காமல் ஒப்பந்ததாரர் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் கிராமம் மாதா கோயில் தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு இயங்கி வந்தது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வந்தனர்.

இந்த, அங்கன்வாடி மைய கட்டிடம் பராமரிப்பின்றி பாழடைந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இதனால், பாதுகாப்பு கருதி சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிக்கு குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், அபாயகரமாக காட்சியளிக்கும் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சென்னை அணுமின் நிலையத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோரிக்கையை ஏற்று, சென்னை அணுமின் நிலையம் சமூக பொறுப்பு திட்டம் (சிஎஸ்ஆர்) மூலம் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கி, கடந்த டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. மேலும், டெண்டர் விட்டு 5 மாதங்களை கடந்தும் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் இதுவரை நேரில் வந்து பார்க்காமலும், எந்த பணிகளும் துவங்காமல் அலட்சியம் காட்டி வருவதாக குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இதனால், அங்கன்வாடி மையம் பூட்டியே கிடக்கிறது. எனவே, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் உடனடியாக தலையிட்டு பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படும் எனவும் குழந்தைகளின் பெற்றோர் எச்சரித்துள்ளனர்.

The post அங்கன்வாடி கட்ட ரூ.26 லட்சம் டெண்டர் விட்டும் கட்டுமான பணி துவங்காமல் ஒப்பந்ததாரர் அலட்சியம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Mamallapuram ,Pattipulam ,Dinakaran ,
× RELATED 21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம்