×
Saravana Stores

ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. இதில், கண் எரிச்சலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் ஆடு, கோழி இறைச்சி, மீன் கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளை வைத்து பலர் தொழில் செய்து வருகின்றனர்.

இங்கு சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் சாலை ஓரத்திலேயே கொட்டி குவித்து எரித்து வருகின்றனர். இதில், கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் கண் எரிச்சலில் சிக்கி சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து துறை அதிகாரிகளும் இந்த வழியாகத்தான் போக்குவரத்து செய்கின்றனர். இதில் மீன், ஆடு, கோழி இறைச்சிகளின் கழிவுகளை ஜிஎஸ்டி சாலை ஓரத்திலேயே வீசுகின்றனர்.

மேலும், இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு செல்கின்றனர். இதனால், அரசு மற்றும் மாநகர பேருந்துகள் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும் கண் எரிச்சலில் சிக்கி தேவையான தவித்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் குப்பையை கொட்டி எரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Urpakkam ,Chennai-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் அருகே கார் மோதி இரண்டு பெண் காவலர்கள் உயிரிழப்பு