சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து காய்கறிகளும் வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் வணிகர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று காலை கூடுதலாக 750 வாகனங்களில் இருந்து 7,500 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. வழக்கம்போல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 650 வாகனங்களில் இருந்து 6,500 டன் காய்கறிகள் வருவது வழக்கம். ஆனால் வணிகர் தின விடுமுறையால் கூடுதல் வாகனங்களில் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. ஆனாலும், திடீரென அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ வெங்காயம் ரூ20லிருந்து 30க்கும், தக்காளி ரூ20லிருந்து 40க்கும், பீன்ஸ் ரூ50லிருந்து 180க்கும், பீட்ரூட் ரூ25லிருந்து 50க்கும், முள்ளங்கி ரூ15லிருந்து 30க்கும், சவ்சவ் ரூ30லிருந்து 50க்கும், முட்டைகோஸ் ரூ15லிருந்து 30க்கும், வெண்டைக்காய் ரூ20லிருந்து 40க்கும், கத்தரிக்காய் ரூ10லிருந்து 30க்கும், காராமணி ரூ15லிருந்து 30க்கும், புடலங்காய் ரூ15லிருந்து 40க்கும், சுரக்காய் ரூ10லிருந்து 20க்கும், சேனைக்கிழங்கு ரூ30லிருந்து 65க்கும், முருங்கைக்காய் ரூ15லிருந்து 30க்கும், சேமகிழங்கு ரூ20லிருந்து 40க்கும், வெள்ளரிக்காய் ரூ15லிருந்து 40க்கும் பச்சை மிளகாய் ரூ50லிருந்து 100க்கும், அவரைக்காய் ரூ40லிருந்து 60க்கும், பட்டாணி ரூ80லிருந்து 150க்கும், பீர்க்கன்காய் ரூ20லிருந்து 40க்கும், எலுமிச்சை பழம் ரூ100லிருந்து 150க்கும், நூக்கல் ரூ15லிருந்து 40க்கும், கோவைக்காய் ரூ10லிருந்து 30க்கும், கொத்தவரங்காய் ரூ10லிருந்து 30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘மார்க்கெட்டுக்கு கூடுதல் வாகனங்களில் அனைத்து காய்கறிகளும் வந்துள்ளன. காய்கறி விலை படிப்படியாக குறையும்’’ என தெரிவித்தார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ பீன்ஸ் ரூ180க்கு விற்பனை appeared first on Dinakaran.