×
Saravana Stores

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்ப பதிவு தொடங்கியது: ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்

சென்னை: ஊட்டி, கொலைக்கானல் செல்ல நேற்று முதல் இ-பாஸ் விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஜூன் 30ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலை பிரதேசங்களுக்கு செல்ல மே 7ம் தேதி (இன்று) முதல் இ-பாஸ் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவு மற்றும் இ-பாஸ் விநியோகம் நேற்று காலை 6 மணி முதல் தொடங்கியது. தமிழகத்தில் வழக்கமாக கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற மலைப்பிரதேச சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இப்படி கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் அங்கு கூட்ட நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து, ‘இ‌-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளுக்கும் குறிப்பிட்ட அளவிலேயே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இன்று (7ம் தேதி) முதல் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருவதற்கு இ-பாஸ் பதிவு அவசியம் என்று தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பதிவு நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் ‘epass.tnega.org’ என்ற இணைய முகவரியில் பதிவு செய்து மிக எளிதாக இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் தான் இ-பாஸ் முறை இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் (ஜூன்) 30ம் தேதி வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்ப பதிவு தொடங்கியது: ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kodaikanal ,CHENNAI ,Kolikanal ,Dinakaran ,
× RELATED சீனாவில் முதன்முறையாக நடைபெற்ற பூசணி கலை விழா..!!