சென்னை: சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள நீர்வளப் பணியாளர்கள் பயிற்சி நிலையத்தில் நீர்வளத்துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட உதவிப் பொறியாளர்களுக்கான 5 நாள் பயிற்சிக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்கட்டமாக மே 6 முதல் 10ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மே 20 முதல் 24ம் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு கட்டத்திலும் கிட்டத்தட்ட 40 புதிய உதவிப் பொறியாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் நீர்வள பணியாளர்கள் பயிற்சி நிலைய இயக்குநர் இணை தலைமை பொறியாளர் (பொது) திலகம் கூறுகையில், உதவி பொறியாளர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படவும், நேர்மறையான சிந்தனையுடன் செயலாற்றவும், துறை மேன்மை அடைவதற்கு முக்கிய பங்காற்றும் வகையில் செயல்பட வேண்டும். ஒவ்வொரு சொட்டு நீரின் முக்கியத்துவம், தமிழ்நாடு மிகை நீர் மாநிலமாக திகழ எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். முன்னதாக, துணை இயக்குநர் மற்றும் செயற்பொறியாளர் அர்ஷத் நவாஸ் கூறுகையில், பயிற்சியில் இடம்பெறவுள்ள தலைப்புகளை பொறியாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தரமணியில் உள்ள மண் தன்மை மற்றும் ஆராய்ச்சி ஆய்வகத்தையும் அதில் உள்ள பல்வேறு வசதிகளை பார்வையிடவும், சமீபத்தில் வாங்கப்பட்ட புதிய உபகரணங்களை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
The post நீர்வளத்துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.