×

ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது

சென்னை: ஆயிரம்விளக்கு பகுதியில் மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 உயர் ரக வளர்ப்பு நாய்கள் கடித்து குதறின. தடுக்க வந்த தாயையும் கடித்ததால் அப்பகுதியல் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாய் உரிமையாளரை குடும்பத்துடன் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பாதுகாவலராக ரகு என்பவர் உள்ளார். இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்‌ஷாவுடன் பூங்காவிலேயே உள்ள கட்டிடத்தில் வசித்து வருகிறார். பாதுகாவலர் ரகு நேற்று உறவினர் இறப்புக்கு விழுப்புரம் சென்றுவிட்டார். பூங்காவில் அவரது மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்‌ஷா மட்டும் இருந்தனர்.

பூங்கா அருகில் வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது வீட்டில் ‘ராட்வீலர்’ வகையை சேர்ந்த 2 கருப்பு நாய்களை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் புகழேந்தி நேற்று முன்தினம் இரவு தனது 2 வளர்ப்பு நாய்களுடன் பூங்காவிற்கு வந்துள்ளார். நாய்களுக்கு எந்த கயிறும் இல்லாமல் அழைத்து வந்துள்ளார். அப்போது பூங்காவில் சுதக்‌ஷா மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென 2 நாய்களும் சிறுமியை பார்த்ததும் பாய்ந்து சென்று கடித்தன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு தாய் சோனியா ஓடி சென்று இரண்டு நாய்களிடம் இருந்து தனது மகளை கடுமையாக போராடி மீட்டார். ஆனால் அந்த 2 நாய்களும் சோனியாவையும் கடித்தன.

ஒரு கட்டத்தில் 2 நாய்களும் சிறுமியை தலை மற்றும் உடல் முழுவதும் கடித்து குதறின. இதில் ரத்தம் கொட்டிய நிலையில் சிறுமி துடித்துக் கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமிக்கு தலையில் பலத்த காயம் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது தாய் சோனியாவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து சோனியா ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் உள்பட 3 பேர் மீதும் ஐபிசி 289, 336 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைதொடர்ந்து நாய் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியின் மருத்துவ செலவுகளை பார்த்துக்கொள்வதாக கூறினார். அதைதொர்டர்ந்து சிறுமியை அரசு பொது மருத்துமனையில் இருந்து ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் 3 பேரையும் போலீசார் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

சிறுமியின் பிளாஸ்டிக் சர்ஜரி செலவை மாநகராட்சி ஏற்கும்: ஆணையாளர் தகவல்
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில், வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில், நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்று. எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை வளர்த்து வந்துள்ளனர். நாய்களின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசன்ஸ் பெற வேண்டும்.

நாய்களுக்கு அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். கால்நடை துறையுடன் சேர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வீட்டில் வளர்க்க முறையான அனுமதி பெறவில்லை. விலங்குகள் நலவாரியம் சார்பில் கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளது. இனப்பெருக்கம் செய்ய தடை உள்ளது. நீதிமன்றம் சென்று கால்நடை பாதிப்பு குறித்து முறையிட உள்ளோம். கால்நடையினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கான விளக்கத்தை பெறுவோம். பூங்காக்களுக்கு நாய்கள் அழைத்து வருவது கட்டுப்படுத்தப்படும். தவறான அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் நுழைவது தடுக்கப்படும். பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பகுதிக்கு நாய்கள் நுழைவது தடை செய்யப்படும்.

தற்போது நாயை பிடிக்க முடியாது. பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. இதுகுறித்து கலந்தாலோசித்து நீதிமன்றத்தில் முறையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு எடுக்கப்படும். சென்னையில் 10,000க்கும் மேற்பட்ட செல்லபிராணிகள் வளர்ந்து வரும் நிலையில் வெறும் 1,200 பேர் மட்டுமே மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர். எனவே சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும். சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் சென்னை மாநகராட்சி ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு தெரிவித்தார்.

The post ஆயிரம்விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; நாய் உரிமையாளர், மனைவி, மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Ayaarvilakku ,CHENNAI ,Ayaravilakku ,Ayadavilakku ,Dinakaran ,
× RELATED ராட்வீலர் நாய்கள் கடித்து காயமடைந்த...