×
Saravana Stores

கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்கும் வகையில் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காப்பதற்காக, போக்குவரத்து போலீசார் சாலையின் சிக்னல் சந்திப்புகளில் பசுமை பந்தல் அமைத்துள்ளனர். கோடைகாலம் தொடங்கி கோடை வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து, பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுகிறது.வெப்ப அலை வீசுவதும் காரணமாக பொதுமக்கள் காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகங்களும், நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோடை வெப்பம் 108 டிகிரி வரை அதிகரித்து வரும் நிலையில், சாலை சிக்னல்களில் பணியில் உள்ள காஞ்சிபுரம் போக்குவரத்து போலீசார், பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர், உள்ளிட்டவர்களை நாள்தோறும் வழங்கி வருகிறது. தற்போது, அதற்கு ஒருபடி மேலே போய் காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதியான பேருந்து நிலையம் அருகே உள்ள இரட்டை மண்டபம் சிக்னல் சந்திப்பில் சாலையில் நின்று செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, கோடை வெயிலின் வெப்பம் தாக்காமல் இருக்க பசுமை பந்தல் அமைத்து கொடுத்துள்ளனர்.பசுமை பந்தல் அமைத்துள்ளதன் காரணமாக சிக்னல் விழுவதால் சாலையில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் நிழலின் அருமையை அனுபவித்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளுக்காக போக்குவரத்து போலீசார், பசுமை பந்தல் அமைத்துள்ள செயல் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு, போக்குவரத்து போலீசாரின் செயலுக்கு மக்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

* சென்னையிலும் வருகிறது…
கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பத்தை தணிக்க, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களிலும் விரைவில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ராயபுரம் மண்டலம், ராஜா முத்தையா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை சந்திப்பு, அண்ணாநகர் மண்டலம், 2வது அவென்யூ, திருமங்கலம் ரவுண்டானா சிக்னல், அண்ணாநகர் மண்டலம், நியூ ஆவடி சாலை, கீழ்ப்பாக்கம்-3வது அவென்யூ சந்திப்பு, தேனாம்பேட்டை மண்டலம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்-சேத்துப்பட்டு சிக்னல், அடையாறு மண்டலம், எல்.பி. சாலை, மேற்கு அவென்யூ சாலை சந்திப்பு, திருவான்மியூர், அடையாறு, ஓ.எம்.ஆர். ஆகிய போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் வாகன ஓட்டிகள் நலன் கருதி, பசுமை பந்தல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்கும் வகையில் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kanchipuram district ,
× RELATED ஒன்றுபட்டு உழைப்போம் நாடாளுமன்ற...