சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கை நிவேதா 600க்கு 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி நிவேதா கூறியதாவது: நான் திருவல்லிக்கேணியில் உள்ளேன். என்னை 2 திருநங்கைகள் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். நீட் தேர்வு எழுதி உள்ளேன். அதில் பாஸ் ஆவேன் என நம்புகிறேன். பள்ளியில் என்னை திருநங்கை என்று யாரும் ஒதுக்கவில்லை. நான் கடந்த 3 வருடங்களுக்கு முன் படிப்பை நிறுத்திவிட்டேன். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அதனால் என் பாட்டியிடம் சொன்னேன். திருநங்கை என்பதால் பள்ளியில் சேர அலைக்கழிக்கப்பட்டேன். பின்னர் பள்ளிக் கல்வி துறை அதிகாரிகளிடம் சென்று கோரிக்கை வைத்தேன். அதிகாரிகள் எனக்கு இந்த பள்ளியில் சேர உதவி செய்தனர். என்னை போல படிக்க ஆசைப்படும் திருநங்கைகளுக்கு பள்ளியில் சீட் கொடுக்க வேண்டும். நான் பட்டப்படிப்பு பயில பொருளாதார வசதி இல்லை. பாட்டியும் உடல் நிலை முடியாமல் உள்ளார். என்னுடைய படிப்புக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றால் நல்லா இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நிவேதாவை பள்ளியில் சேர்த்த திருநங்கை அனுஸ்ரீ கூறுகையில், ‘‘நிவேதா திருநங்கையாக மாறி எங்களிடம் வந்தாள். படிக்க வேண்டும் என்று சொன்னாள். இதுவரை எந்த திருநங்கையும் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அதனால் பள்ளியில் சேர்க்க போராடினோம். நிவேதா பிளஸ் 2 தேர்ச்சி பெற்றது மிகப் பெரிய விசயம். மொத்தம் 7 திருநங்கைகள் சிறிய வீட்டில் வசிக்கிறோம். எப்போதும் சத்தமாக இருக்கும். இதற்கு நடுவில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். எங்கள் தொகுதியின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் நிவேதாவிற்கு பள்ளியில் சேர வாய்ப்பு கிடைத்தது’’ என்றார்.
The post பிளஸ் 2 தேர்வில் திருநங்கை நிவேதா தேர்ச்சி: உயர்கல்வி பயில உதவ அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.