×

சீக்கிய தீவிரவாதிகளிடம் கெஜ்ரிவால் நிதி பெற்றதாக புகார்: என்ஐஏ விசாரணை கோரி ஆளுநர் சக்சேனா கடிதம்


புதுடெல்லி: காலிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து ஆம் ஆத்மி ரூ133 கோடி நிதியுதவி பெற்ற விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த கோரி ஒன்றிய உள்துறைக்கு டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா கடிதம் எழுதியுள்ளார். மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஆளுநர் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய சீக்கிய தீவிரவாதி தேவேந்திர பால் புல்லர் என்பவருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. புல்லரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இதையடுத்து, அவர் அமிர்சரஸ் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 2014 ம் ஆண்டு நியூயார்க் சென்றிருந்த கெஜ்ரிவால் புல்லாரை விடுதலை செய்வது தொடர்பாக, காலிஸ்தான் தலைவர்களுடன் நியூயார்க்கில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது காலிஸ்தான் ஆதரவு குழுவான ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பிடம் இருந்து ரூ 133 கோடியை அவர் பெற்றுள்ளார். இது தொடர்பாக புகார்தாரர் அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் அவரிடம் தடயவியல் விசாரணை நடத்த வேண்டும். மேலும் இதை தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளார். நாட்டிலேயே ஒரு முதல்வருக்கு எதிராக என்ஐஏ விசாரணை நடத்த ஆளுநர் கோரியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆளுநரின் சதி
இதுகுறித்து கூறிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ், ‘‘ கெஜ்ரிவாலுக்கு எதிராக இன்னொரு சதி திட்டத்தை ஆளுநர் முன்னெடுத்துள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜ தோல்வியை தழுவும் என்ற அச்சம் பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

The post சீக்கிய தீவிரவாதிகளிடம் கெஜ்ரிவால் நிதி பெற்றதாக புகார்: என்ஐஏ விசாரணை கோரி ஆளுநர் சக்சேனா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Governor ,Saxena ,NIA ,New Delhi ,Delhi ,VK Saxena ,Union Home Ministry ,National Intelligence Agency ,Aam Aadmi Party ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால...