×

மோடி அரசுக்கு எதிராக முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்: ராகுல் வேண்டுகோள்

 

புதுடெல்லி: மக்களவை 3ம் கட்ட தேர்தல் இன்று நடக்க இருக்கும் நிலையில் தனது எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்த தேர்தல் சாதாரண தேர்தலோ அல்லது அரசியல் கட்சிகளுக்கிடையே நடக்கும் தேர்தலோ அல்ல. ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்றும் தேர்தல். நீங்கள் கட்சியின் முதுகெலும்பு. நீங்கள் இல்லாமல் எங்களால் வெற்றி பெற முடியாது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் நாம் நன்றாகப் போராடினோம். பாஜவின் பொய்கள் மற்றும் கவனச்சிதறல்களை எங்களால் எதிர்க்க முடிந்தது. இதனால் அவர்கள் எங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு மாத கடின உழைப்புக்கான நேரம் இது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து காங்கிரசின் செய்தியையும் நமது உத்தரவாதத்தையும் ஒவ்வொரு கிராமம், வட்டாரம், தெருவுக்கு எடுத்துச் செல்வோம். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு இளைஞர்களையும், பெண்களையும், தொழிலாளிகளையும், விவசாயிகளையும், பின்தங்கிய குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடைசி காங்கிரஸ் தொண்டன் கூட உண்மைக்காக நிற்கும் வரை இந்தியாவில் வெறுப்பு வெல்ல முடியாது என்பது எனக்கு தெரியும். இந்த போராட்டத்தில் நான் எனது முழு பங்களிப்பையும், அர்ப்பணிப்புடன் செய்கிறேன். அதே போல நீங்களும் செய்ய வேண்டும். நாம் தனிநபர் அல்ல, கோடிக்கணக்கானவர்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம், வெற்றி பெறுவோம், நாட்டின் நிலைமையை மாற்றுவோம் என்று கூறிஉள்ளார்.

The post மோடி அரசுக்கு எதிராக முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்: ராகுல் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul ,New Delhi ,Lok Sabha elections ,Rahul Gandhi ,Congress ,Modi government ,Dinakaran ,
× RELATED மோடிக்கு எதிராக வன்முறையை தூண்டும்...