வாஷிங்டன்: போயிங் தனியார் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் விமானியாக இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது 58வது வயதில் 3வது முறையாக இன்று விண்வெளிக்கு பறக்க இருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் கடந்த 2006 மற்றும் 2012ம் ஆண்டுகளில் 2 முறை நாசா சார்பில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். தற்போது 58 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக மீண்டும் விண்வெளிக்கு செல்ல உள்ளார். இம்முறை அவர் தனியார் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் விமானியாக விண்வெளிக்கு செல்ல உள்ளார். அவருடன் புட்ச் வில்மோரும் விண்கலத்தில் பயணிக்க உள்ளார்.
புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்லைனர் விண்கலம் இந்திய நேரப்படி இன்று காலை 8.04 மணிக்கு புறப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கு சுனிதா வில்லியம்ஸ் சென்று திரும்புவார். இந்த பயணம் வெற்றி அடையும் பட்சத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை அனுப்பி வைக்கும் 2வது தனியார் நிறுவனமாக போயிங் மாறும். இதுவரை ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் நிலையில், ஸ்டார்லைனர் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று சோதிக்கப்பட உள்ளது.
The post 58 வயதில் 3வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம்: இன்று காலை 8.04 மணிக்கு புறப்படுகிறார் appeared first on Dinakaran.