×

தமிழக அரசு அறிவிப்பு; போர்க்கால அடிப்படையில் பொழிக்கரையில் கடலரிப்பு தடுப்புச்சுவர்: பொதுமக்கள் கோரிக்கை

ஈத்தாமொழி: கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஏராளமான கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். வழக்கமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேற்று முன்தினம் இரவு திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக நேற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர்களைத் தாண்டி கடல் நீர் ஆக்ரோசமாக கரையை நோக்கி வந்தது. ஈத்தாமொழி அருகே உள்ள பொழிக்கரை மீனவ கிராமத்தில் கடலலை நேற்று காலை 11 மணி அளவில் தொடர்ச்சியாக புகுந்தது. பொழிக்கரை கடற்கரையில் சுமார் 70 வீடுகள் உள்ளன. இதில் 20 வீடுகளில் கடல்நீர் புகுந்தது. மேலும் ஆக்ரோசமான அலையால் கரையோரம் நின்ற 7 தென்னைமரங்கள் வேரோடு சாய்ந்தது. வேரோடு விழுந்த தென்னை மரத்தில் சில தென்னை மரத்தை அலைஇழுத்துச்சென்றது.

மேலும் பொழிக்கரை மீனவர்கள் மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்காக காங்கிரீட் தளம் உள்ளது. நேற்று அடித்த ஆக்ரோஷ அலையில் இந்த காங்கிரீட் தளமும் உடைந்தது. ஒரு பகுதியை கடல் அலை இழுத்துச்சென்றது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், பங்குதந்தை ரஞ்சித்குமார், அதிமுக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், கேசவன்புத்தன்துறை பஞ்சாயத்து தலைவர் கெபின்ஷா, மீன்வளத்துறை ஆய்வாளர் விபின் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பொழிக்கரை கடற்கரை பகுதியில் வசிக்கும் 70 மீனவ குடும்பங்களையும், பாதுகாப்பாக அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இன்று கடல் சீற்றம் குறைந்ததால், மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்து ெபாதுமக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு வந்தனர். கடந்த 2018-19ம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் பொழிக்கரையில் சுமார் 1500 மீட்டர் தூரத்திற்கு ரூ.5 கோடி செலவில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்தது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பொழிக்கரையில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

The post தமிழக அரசு அறிவிப்பு; போர்க்கால அடிப்படையில் பொழிக்கரையில் கடலரிப்பு தடுப்புச்சுவர்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Ethamozhi ,Kanyakumari ,Neerodi ,Pozhikarai ,Dinakaran ,
× RELATED அயலக தமிழர் நல வாரியம் மூலம் வெளிநாடு,...