×
Saravana Stores

கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் தண்ணீருக்கு அலையும் பொதுமக்கள்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் பேறுகால சிகிச்சையில் இருக்கும் பெண்களின் உறவினர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் ஒரு லிட்டர் இலவச தண்ணீரை ரூ.2க்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், நரம்பியல், இதயவியல், நுரையீரல், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ துறைகளில் உயர் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ரத்த பரிசோதனை முடிவுகளை வழங்கும் இடம், நோயின் தீவிரத்தன்மையை உடனடியாக அறிய டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கும் இடம், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் உள்ளிட்ட ஸ்கேன்கள் எடுக்கும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. சராசரியாக தினசரி 1800 பேர் முதல் 2000 பேர் வரை உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோல், வெளிநோயாளிகளாக 3000 பேர் முதல் 4000 பேர் வரை சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

நெல்லை உட்பட 4 மாவட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவத்தேவைக்கு நெல்லை அரசு மருத்துவமனையை நம்பியே உள்ளனர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவருக்கு தெரிந்த அல்லது உறவினர்கள் உதவியாளர்களாக இல்லையெனில் அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு நிகராக அவர்களது உதவியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். இதில் பிரசவ கால சிகிச்சையில் இருக்கும் பெண்களுக்கு, அவர்களது தாய் அல்லது பெண் உறவினர் ஒருவர் மட்டும் வார்டுக்குள் அனுமதிக்கப்படுவர். ஆனால் கர்ப்பிணிகளுக்கு உதவி செய்ய வார்டுக்குள்ளும், வெளியேயும் ஆட்கள் கட்டாய தேவை உள்ளது. அதனால் ஒரு கர்ப்பிணிக்கு உதவுவதற்காக இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்குகின்றனர். ஆனால் அவர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில் பிரசவ வார்டுக்கு அருகே கர்ப்பிணிகளின் உறவினர்கள் அமருவதற்கு இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். அவர்களது தண்ணீர் தேவைக்கு அருகிலேயே நல்லி, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை அரசு மருத்துவமனையில் அதுபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கர்ப்பிணிகளின் உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் அடிப்படை வசதிகளின்றி அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிரசவ வார்டுக்கு வெளியே தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் இலவச தண்ணீரை ஒரு லிட்டர் ரூ.2க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பகலில் வெயிலிலும், இரவில் குளிரிலும், கொசுக்கடியிலும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் காத்திருக்க சிமென்ட் மேற்கூரை அமைத்து இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், அருகிலேயே குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் தண்ணீருக்கு அலையும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Nellai Government Hospital ,Nellai ,
× RELATED பாளையில் அரசு மருத்துவமனை ஊழியரின் கார் தீப்பிடித்து எரிந்து சேதம்