×

வேலூர்-சென்னை-செங்கல்பட்டு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் எதிர்பார்ப்பு

வேலூர்: சென்னையை சுற்றி செங்கல்பட்டு, தாம்பரம், பெரும்புதூர், திருவள்ளூர், பெரம்பூர், அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மோட்டார் வாகன தொழிற்சாலைகள், செல்போன் உதிரிபாக தொழிற்சாலைகள், பொறியியல், மருத்துவக்கல்லூரிகள் உட்பட உயர்கல்வி நிறுவனங்கள் பெருகியுள்ளன. இதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணிக்காக சென்னைக்கு சென்று வருகின்றனர். மேலும் பணி, கல்வி, வர்த்தகம் என பல காரணங்களுக்காக செல்பவர்களும் உள்ளனர். இவர்கள் அரசு பஸ்களில் செல்ல வேண்டும். அல்லது காலை 8 மணி வரை காட்பாடி வழியாக செல்லும் கோவை-சென்னை, திருப்பத்தூர்-சென்னை, பெங்களூர்-சென்னை, ஈரோடு-சென்னை, மங்களூரு-சென்னை, மைசூரு-சென்னை மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களில் செல்ல வேண்டும்.

இந்த ரயில்களில் முன்பதிவு மற்றும் பொது ஆகிய இருதரப்புக்கும் வசதியாக உள்ளது. இதுதவிர ஜோலார்பேட்டை அல்லது ஏலகிரி எக்ஸ்பிரஸ், வேலூர் கன்டோன்மென்ட்-பீச் பாஸ்ட் பாசஞ்சர் ரயில்களும் உள்ளன. இதில் வேலூர் கன்டோன்மென்ட்-சென்னை பீச் பாஸ்ட் பாசஞ்சர் தற்போது திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அரக்கோணத்தில் இருந்து 30 நிமிட இடைவெளியில் யூனிட் ரயில்களும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. வேலூர், காட்பாடியை பொறுத்தவரை ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்து கொண்டு ரயிலில் பயணம் செய்கின்றனர். பஸ் கட்டணத்தை விட ஒரு டிக்கட்டுக்கு ₹35 முதல் ₹50 வரை மீதமாகும். அதோடு பயண நேரமும் மிச்சமாகும்.

எனவே, சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு வரை பணி நிமித்தம் காரணமாக சென்று வர காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 9.30 மணிக்குள் திரும்பும் வகையில் வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து சென்னை தாம்பரம் அல்லது செங்கல்பட்டு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் விட வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். ஏ.சி. கோச், முன்பதிவு வசதியுடன் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, பொது பிரிவு என்ற பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இந்த ரயில் இயக்கப்படும் போது ஏறத்தாழ 5 ஆயிரம் பயணிகள் வரை இந்த ரயிலில் பயணம் செய்வார்கள்.
அதோடு, நகரி-திண்டிவனம் இடையே ஆமை வேகத்தில் நடந்து வரும் ரயில்பாதை பணியை விரைந்து முடித்து அந்த பாதையிலும் ரயில் இயக்கப்பட்டால் வேலூர், அரக்கோணம் மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட மக்களும் பயன்பெறுவர். எனவே, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் மேற்கண்ட புதிய எக்ஸ்பிரஸ் ரயிலையும், கூடுதல் பாஸ்ட் பாசஞ்சர் அல்லது மெமு ரயில்களை விடவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

The post வேலூர்-சென்னை-செங்கல்பட்டு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore- ,Chennai ,Chengalpattu ,Vellore ,Tambaram ,Perumbudur ,Thiruvallur ,Perambur ,Ambattur ,Poontamalli ,Maduravayal ,Thus ,Chennai- ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...