ஜெய்ப்பூர்: மீடியம் வாரியாக வழங்காமல், வினாத்தாளை மாற்றி வழங்கியதால் ஏற்பட்ட குழப்பத்தால் ராஜஸ்தானில் 120 தேர்வர்களுக்கு நேற்றிரவு நீட் தேர்வு நடந்தது. இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (நீட்) நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வானது, நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில் ராஜஸ்தான்
சவாய் மாதோபூரில் உள்ள ஆதர்ஷ் வித்யா மந்திர் மாண்டவுன் தேர்வு மையத்தில் பங்கேற்ற தேர்வர்களில் சிலருக்கு, இந்தி மீடியம் வினாத்தாளுக்கு பதிலாக ஆங்கில மீடியம் வினாத்தாள் வழங்கப்பட்டது. அதேபோல் ஆங்கில மீடியம் தேர்வர்களுக்கு இந்தி மீடியம் வினாத்தாள் வழங்கப்பட்டது.
இதனால் தேர்வு மையத்தில் குழப்பம் ஏற்பட்டது. மீடியம் வாரியாக வினாத்தாளை பிரித்துக் கொடுப்பதற்கு பதிலாக, மாற்றி மாற்றி வினாத்தாளை கொடுத்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தும் கோபமடைந்த தேர்வர்கள் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். உரிய நேரத்தில் தேர்வு எழுத முடியாததால், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. அதனால், அந்த தேர்வு மையத்தில் மீடியம் குழப்பத்தால் பாதிக்கப்பட்ட 120 தேர்வர்கள், மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே தேசிய தேர்வு முகமை, மேற்கண்ட தேர்வு மையத்தில் நடந்த குழப்பத்தை ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டது.
The post ராஜஸ்தானில் இரவில் நடந்த நீட் தேர்வு: 120 தேர்வர்கள் அதிருப்தி appeared first on Dinakaran.