×
Saravana Stores

மாநகர எல்லைப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மல்லுகட்டும் ஊழியர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

திருச்சி, மே 6: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கும் நிலையிலும் ஆடு, மாடுகள் வளர்ப்போர் அடாவடியாக சாலைகளில் மாடுகளை திரிய விடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு, சாலை விபத்துகள் என பல்வேறு இன்னல்களுக்கு பொதுமக்கள் உள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாநகரப்பகுதிகளில் வீதிகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, நாய் ஆகியவற்றால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சமீப காலமாக சாலைகளில் சுற்றித்திரியும் இவற்றின் எண்ணிக்கை முன் எப்பவும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. சாலைகளில் திடீரென ஓடி வரும் ஆடு, மாடு, கன்றுக்குட்டிகள், நாய் இவற்றால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து, கை, கால்களில் காயத்துடன் தட்டுத்தடுமாறி எழுந்து செல்வதை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது.

இதில் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்கிறது. ஒருவர் நிரந்தர ஊனமானதற்கு அல்லது ஒருவர் உயிர் பலியானதற்கு நாம் வளர்த்த ஆடு, மாடுகளே காரணமாகி விடுகிறது. நாள்தோறும் நடக்கும் இந்த விபத்துகள் முடிவில்லா பயணமாக தொடர்கிறது. இப்பிரச்சினையில் பொதுமக்கள் இறுதியில் மாநகராட்சியை குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் மாநகரில் ஆடு, மாடு, தெரு நாய்களால் ஏற்படும் விபத்துகளும், அவற்றால் ஏற்படும் வலிகளும், விபரீதங்களும் சொல்லி மாளாது. இருப்பினும் இப்பிரச்சினையில் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற நிலையே நிலவுகிறது என்கின்றது மாநகராட்சி தரப்பு.

இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, வீதிகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, தெரு நாய்கள் குறித்த புகார்கள் அதிகமாகும் போது, இதற்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு, அவர்களுடன் மாநகராட்சி ஊழியர்களும் வீதி, வீதியாக சென்று மாடுகளை பிடித்து பட்டியில் அடைத்து வருகிறோம். இதற்காக 65 பேருக்கு மாநகராட்சி டெண்டர் வழங்கியுள்ளது. இதில் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ₹5ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மாநகரின் காந்தி மார்க்கெட், சிந்தாமணி, கோர்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் ஓரளவு வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். ஆனால் மாநகர எல்லை பகுதிகளில் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலான காரியமாக உள்ளது.

ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளையை அடக்குவதைவிட சவால் நிறைந்த பணியாகும் சாலைகளில் மாடு பிடிப்பது. எனவே இந்த பணியை மேற்கொள்ள ஆட்கள் கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ளது. திருச்சி கே.கே நகர் பகுதியில் சாலைகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிவருதாக புகார்கள் வந்ததால் நேற்று முன்தினம் கே.கே.நகர், உடையான்பட்டி, ஜெய் நகர், அன்பழகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போராட்டத்துக்கு பின்னர் 5 மாடுகளை பிடித்து கோணக்கரை பட்டிக்கு வேன்களில் ஏற்றி அனுப்பி வைத்தோம்.

அப்போது ஒரு மாடு வெறித்துக்கொண்டு ஓடி ஒரு காரில் இடித்ததில் கார் பலத்த சேதமானது. இதற்கு மாநகராட்சிதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கார் உரிமையாளர் கேட்க, பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து நாங்கள் மாடுகளை பிடிக்கின்றோம். ஆனால் மிகச்சிலர்தான் மாட்டை அபராதம் கட்டி மீட்டு செல்கின்றனர். பெரும்பாலானோர் அந்தந்த பகுதி முக்கிய பிரமுகரை அழைத்து வந்து சமாதானம் பேசி மாட்டை மீட்டு சென்றுவிடுகின்றனர். இவர்கள் அபராதம் கட்டுவதில்லை. ஆனால் மீண்டும் அதே மாடுகளை சாலையில் திரிய விடுகின்றனர்.

The post மாநகர எல்லைப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மல்லுகட்டும் ஊழியர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...