×
Saravana Stores

நெல் வயலில் பாசி கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஜெயங்கொண்டம், மே6: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்த பகுதிகளில் ஆங்காங்கு அதிகளவு பாசி படர்ந்து காணப்படுகிறது. பாசியானது நெல் பயிரின் வேர் வளர்ச்சி, மண்ணில் காற்றோட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. மண்ணிலிருந்து சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
பாசி உள்ள வயல்களில் ஹைட்ரஜன் சல்பைடு என்னும் வாயு வெளியேறுவதால் பயிர்கள் கொத்து கொத்தாக காய்ந்து விடும் அபாயம் உள்ளது . கரையும் பாஸ்பரஸ் மண்ணில் அதிக அளவில் இருந்தால் பாசியின் தாக்குதல் ஏற்படும்.

பாசி தாக்குதல் அதிகம் உள்ள வயல்களில் டிஏபி உரம் இடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். நெல் வயலில் படர்ந்துள்ள பாசியின் அளவுவிற்கு ஏற்ப ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட் 50 கிராம் அல்லது 100 கிராம் ஆக பழைய வேட்டி துணிகளில் சிறு சிறு பொட்டலங்களாக கட்டி ஏக்கருக்கு 10 முதல் 20 இடங்களில் போட்டு வைக்க வேண்டும். காப்பர் சல்பேட் கரையும் இடத்தை சுற்றி பாசியின் விதைகள் உருவாவது தடுக்கப்படுகிறது. பாசியின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.

அதிகளவு பாசி உள்ள நெல் வயல்களில் ஏக்கருக்கு இரண்டு கிலோ காப்பர் சல்பேட் பயன்படுத்தலாம், காப்பர் சல்பேட் இடும் போது நீரை வடித்து விட வேண்டும்.மேலும் இத்துடன் ஏக்கருக்கு 400 கிலோ வரை ஜிப்சம் இடுவதன் மூலமும் பாசியை கட்டுப்படுத்தலாம். ஜிப்சத்தில் உள்ள கந்தக சத்து கரையும் பாஸ்பரஸ் பாசிகளுக்கு கிட்டா வண்ணம் செயல்படுகிறது. ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து கரையும் பாஸ்பரஸ் உடன் இணைந்து கால்சியம் பாஸ்பேட் ஆக மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. இதனால் பாசியின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது .மேலும் ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்புச்சத்து வேரின் வளர்ச்சிக்கு உதவி மண்ணின் கட்டமைப்பையும் மேம்படுத்துகிறது.

இதன் மூலம் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது.எனவே விவசாயிகள் பாசி உள்ள வயல்களில் முதலில் காப்பர் சல்பேட்டையும் அதன் பிறகு ஜிப்சமும் இடுவதன் மூலம் எளிதாக பாசியை கட்டுப்படுத்தலாம்.
பாசி அதிகம் உள்ள வயல்களில் காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் பாய்ச்சுவது சிறந்தது.ஆண்டிமடம் வட்டாரம் ராமன் கிராமம் கவிதா நெல் வயலில் ஆய்வு செய்த போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, துணை வேளாண்மை அலுவலர் குணசேகரன், வேளாண்மை உதவி அலுவலர்கள் பழனிவேல், நித்தீஸ்வரன் ,வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் ஆகியோர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர்.

The post நெல் வயலில் பாசி கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Andimadam ,Ariyalur district ,ALGAE ,
× RELATED உடையார்பாளையம் பேரூராட்சியில் போதை...