அரியலூர், மே 6: அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு 2.364 மாணவ, மாணவிகள் எழுதினர். 67 பேர் தேர்வு எழுதவரவில்லை. நாடு முழுவதும் 2024-25ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, மற்றும் ஆயுஷ் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான தேசியஅளவிலான மருத்துவநுழைவு தேர்வு என்னும் நீட் தேர்வு நேற்று நடந்தது. அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வை 5 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர். அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 648 மாணவர்களும், வெங்கட கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணா பொதுப்பள்ளியில் 552 மாணவர்களும், தாமரைக் குளம் ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 432 மாணவர்களும், ரெட்டிப்பாளையம் ஆதித்ய பிர்லா பொதுப்பள்ளியில் 108 மாணவர்களும், கருப்பூர் விநாயகா பொது பள்ளியில் 624 மாணவர்களும் சேர்த்து, மொத்தம் 2364 மாணவர்கள் நேற்று நீட் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு எழுதுவதற்கு வருகை தந்த மாணவர்களை சோதனையிட்ட பின்னர் தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் வாட்ச், கையில் கட்டிய கயிறு, மாணவிகள் தலையில் அணியும் பெரிய பேண்ட் ஆகியவற்றை அகற்றிய பிறகு தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டனர். குடிநீர் பாட்டில்கள் ட்ரான்ஸ்பரென்ட் பாட்டில்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அரியலூர் மான்போர்ட் பள்ளிக்கு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பொதுப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆட்டோக்களில் வருகை தந்தனர். மற்ற நேரங்களில் 100 ரூபாய் வாடகை வசூலிக்கும் ஆட்டோக்கள் நேற்று ரூ. 150 வசூலித்ததால் மாணவர்கள் அவதியுற்றனர். இது போன்று மற்ற தேர்வு மையங்களுக்கும் புது போக்குவரத்து எதுவும் அரசு போக்குவரத்து நிர்வாகத்தால் செய்யப்படாததால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், மின்சார வசதி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி 5.20 மணிக்கு முடிவடைந்தது..
இதில், அரியலூர் மான்போர்ட் பள்ளியில் மொத்தம் 636 பேர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 7 மாணவர்களும், 5 மாணவிகளும் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல், விநாயகா பள்ளியில் 602 பேர் தேர்வு எழுதினர். 10 மாணவர்களும், 12 மாணவிகளும் தேர்வு எழுத வரவில்லை. ராமகிருஷ்ணா பள்ளியில் 534 பேர் தேர்வு எழுதினர். 7 மாணவர்களும், 11 மாணவிகளும் தேர்வு எழுதவில்லை. ராம்கோ வித்யா மந்திர் பள்ளியில் 420 பேர் தேர்வு எழுதினர். 6 மாணவர்களும், 6 மாணவிகளும் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் ஆதித்யா பிர்லா பள்ளியில் 105 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 மாணவிகள் மட்டும் தேர்வு எழுத வரவில்லை. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வை 819 மாணவர்களும், 1,478 மாணவிகளும் என மொத்தம் 2,297 பேர் எழுதியுள்ளனர். மொத்தம் 67 பேர் தேர்வு எழுத வரவில்லை.
The post அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு 2,364 மாணவர்கள் எழுதினர் appeared first on Dinakaran.