×
Saravana Stores

வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்

சென்னை: அட்சயதிரிதியை வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது. விலை குறைந்து வருவதால் நிறைய பேர் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. வளங்களையும், நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் அட்சய திருதியை நாளில் வாங்கும் பொருள் அளவில்லாமல் சேரும் என்பது நம்பிக்கை. அதனாலேயே அட்சய திருதியை நாளன்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள், வீடு மனைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்குவது வழக்கம்.

இந்தாண்டுக்கான அட்சய திருதியை வருகிற 10ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 4:17 மணிக்கு தொடங்கி, மே 11ம் தேதி சனிக்கிழமை மதியம் 2:50 மணிக்கு நிறைவடைகிறது. மே 10, 11 ஆகிய இரு தினத்தன்று, காலை 5:33 மணி முதல் மதியம் 12:18 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்க உகந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த ஆண்டு அட்சயதிரிதியை வரும் 10 முதல் 12ம் தேதி வரை 3 நாட்கள் கொண்டாட நகை வியாபாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 45,000 சிறு மற்றும் பெரிய நகைக்கடைகள், சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் கடந்த 10 நாட்களுக்கு முன்பே தொடங்கியது. ஏராளமானோர் ஆர்வமுடன் நகை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த 2 நாட்களாக நகை விலை சவரனுக்கு சுமார் ஆயிரம் வரை குறைந்துள்ளது. இதை பயன்படுத்தி நேற்றும் நிறைய பேர் நகை வாங்க கடைகளில் முன்பதிவு செய்தனர். அதாவது, குறைந்தப்பட்சம் 25 சதவீதம் முன்பணம் செலுத்தி பிடித்த நகைகளை புக்கிங் செய்தனர்.

அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நகைக்கடைகளில் கவர்ச்சிகரமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சவரனுக்கு ₹1000 குறைவு, வைர நகைகள் கேரட்டுக்கு ₹15,000 குறைவு, வெள்ளி பொருட்கள் கிலோவுக்கு ₹3000 குறைவு, தங்க நாணயங்களுக்கு ஜீரோ சதவீதம் சேதாரம். பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றி கொள்ளலாம். முன்பதிவு செய்வர்கள் அட்சயதிரியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் அந்த விலையிலும் அதிகமாக இருந்தால் முன்பதிவு செய்த விலையிலும் நகைகளை வாங்கி செல்லலாம் என்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.

அதே வேளை அட்சயதிரிதியைக்காக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1000க்கும் மேற்பட்ட புதிய டிசைன்களில் நகைகள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன. அட்சயதிரிதியை வரும் வெள்ளிக்கிழமை காலை தொடங்குகிறது. இதனால், அன்றைய தினம் காலை 6 மணிக்கே கடைகளை திறக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களின் வருகையை பொறுத்து இரவிலும் கூடுதலான நேரம் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களை சிகப்பு கம்பளம், மேளம் தாளங்கள் முழங்க வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது. மேலும் கடைகளை வாழை, மாவிலை தோரணங்களுடன் அலங்காரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அட்சயதிரிதியை அன்று 20 ஆயிரம் கிலோ தங்க நகைககள் விற்பனையானது. தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை விற்பனையானது. தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால் நிறைய பேர் நகை வாங்க முன்வருவார்கள் என்றும், இதனால் வரும் அட்சதிரியை அன்று கடந்த ஆண்டை காட்டிலும் கணிசமான அளவுக்கு நகை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தாண்டுக்கான அட்சய திருதியை வருகிற 10ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 4:17 மணிக்கு தொடங்கி, மே 11ம் தேதி சனிக்கிழமை மதியம் 2:50 மணிக்கு நிறைவடைகிறது.

The post வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Chennai ,Atshayathirithi ,Tamil Nadu ,Akshayatrithi ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது