×
Saravana Stores

வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைப்பு: ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை

சென்னை: வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தது. ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மே 5ம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி பல்வேறு தலைப்புகளில் மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், அதை களைவதற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.

அது மட்டுமல்லாமல் வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கையாக முன் வைப்பார்கள். வணிகர் தினத்தன்று வழக்கமாக கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இந்த ஆண்டு வணிகர் தினம் மே 5ம் தேதியான நேற்று கொண்டாடப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மதுரையில் வணிகர் விடுதலை முழக்கம் மாநாடு நடைபெற்றது. இதே போல பல்வேறு வணிகர் சங்கங்களின் சார்பில் கோவை, சென்னை காமராஜர் அரங்கம், வானகரகம் உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக சென்னையில் உள்ள பெரும்பாலான வணிகர்கள் கடைகளை அடைத்துவிட்டு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றனர். சில வணிகர்கள் குடும்பத்துடன் சுற்றுலாதலங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர். அன்றாடம் ஓய்வின்றி உழைப்பதால், சில வணிகர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தனர்.

வணிகர் தினத்தையொட்டி சென்னையில் மயிலாப்பூர், அண்ணாநகர், அமைந்தகரை, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக மளிகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான ஓட்டல்களும் இயங்கவில்லை. பொதுமக்கள் நலன் கருதி தி.நகர், புரசைவாக்கம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம் போன்ற இடங்களில் சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தனியார் வணிக வளாகங்கள், பிரபல துணிகடைகள், ஓட்டல்கள், மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கின. வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. சென்னையில் மாலையில் சில கடைகள் திறக்கப்பட்டது.

The post வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைப்பு: ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Merchant's Day ,Day of the Merchant ,eve ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது