×
Saravana Stores

தகிக்கும் மலைகளின் அரசி: மின்விசிறிகளை தேடும் மக்கள், வறட்சியால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், மிதமான காலநிலையை கொண்டது. இம்மாவட்டம் குளிர்ச்சியான மலைத்தொடர்களை கொண்டுள்ளதால், ஊட்டி, குன்னூர் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நகரங்களில் கோடை காலத்தில்கூட மிதமான சீதோஷ்ண நிலை நிலவும். குளிர்காலத்தில் ஊட்டியில் உறைபனி நிலவும். ஆனாலும், தென்மேற்கு பருவமழை காலங்களில், மனிதர்கள் தாங்கக்கூடிய மிதமான குளிர்ச்சியான சூழலே காணப்படும்.

இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட வெப்ப காலங்களிலும், இடையிடையே பெய்யும் கோடை மழை காரணமாக, மிதமான வெப்ப நிலையை அனுபவிக்க முடியும். குளிர்காலம் முடிந்து கோடை காலம் துவங்குவதற்கு இடையே உள்ள வசந்த காலத்தில் ஏராளமான மரங்கள், செடி-கொடிகள் பூத்துக்குலுங்கும். கோடை மழையின் கொடையை வைத்து, விவசாயிகள் கோடைகால பயிர்களான காய்கறி விவசாயத்தில் ஈடுபடுவர்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், தமிழ்நாட்டில் சமவெளி பகுதிகளில் இல்லாத சீதோஷ்ண நிலை இங்கு நிலவுவதால், இந்த சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஊட்டி நகரமே நிரம்பி வழியும். ஆனால், இந்த ஆண்டு ஊட்டி நகரம், கோடையின் பிடியில் சிக்கி தவிக்கிறது. வெப்பம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தற்போது வெப்பம் அதிகரித்துள்ளதாலும், கோடை மழை பொய்த்துள்ளதாலும் விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ள குளம், குட்டைகள், சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில், உதகையில் கடந்த மாதம் 29ம் தேதி வரலாறு காணாத அளவாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல்முறையாக இந்த அளவு வெப்பம் பதிவாகி உள்ளது. இதே வெப்ப சில நாட்கள் நீடித்தது.  மின்விசிறி பழக்கமே இல்லாத நீலகிரி மக்கள் பலர், தற்போது மின்விசிறியை தேடி அலைகின்றனர். மின்விசிறி பொருத்தினால்தான் வீடுகளில் குடியிருக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரும் சுற்றுலா தலமான ஊட்டியில் அன்றாடம் உஷ்ணம் உசுப்பேற்றுவதால், ஊட்டி மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் பரிதவிப்பில் உள்ளனர்.

மலை மாவட்டமான ஊட்டியில், கேரட், பீன்ஸ், பீட்ருட், உருளை, காளிபிளவர், முட்டைகோஸ் உள்ளிட்ட பல முக்கிய காய்கறிகளை விளைவித்து, தலைநகர் சென்னை கோயம்பேடு வரை சப்ளை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் காய்கறி விளைச்சலும் `டல்’ அடித்து விட்டது. இங்கிலீஷ் காய்கறிகள் என அழைக்கப்படும் கேரட், பீட்ருட், பீன்ஸ், முட்டைகோஸ், காளிபிளவர், உருளை உள்ளிட்ட காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இது, இம்மாவட்ட மக்களையும், விவசாயிகளையும் பீதி அடைய செய்துள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கூறியதாவது: வழக்கமாக “சம்மர் ஹாலிடேஸ்’’ என்றாலே மக்கள், ஊட்டி, கொடைக்கானல் செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஊட்டியில் கடந்த 1951ம் ஆண்டுக்கு பிறகு 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வழக்கமாக, எல்-நினோ காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பது இயல்பு. இது, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இந்த காலக்கட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.

1951ம் ஆண்டில் இருந்துதான் ஊட்டியில் வெப்பநிலை பதிவு செய்கிறார்கள். நம்மிடம் உள்ள தரவுகளின்படி 73 ஆண்டுக்கு பிறகு இப்போது அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என கூறுகிறோம். வெப்பநிலை பதிவு செய்யும் காலத்துக்கு முன்பாக இதைவிட அதிக வெப்பம் பதிவாகி இருந்திருக்கலாம். கடந்த மாதம் 29ம் தேதி குன்னூரில் 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதே நேரம் 1973ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி குன்னூரில் 29.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் வேறு எங்குமே இந்த அளவு வெப்பநிலை உயரவில்லை.

தமிழ்நாட்டில், ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காலநிலை உள்ளது. அப்படி பார்க்கும்போது கடந்த 29ம் தேதி ஊட்டியில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றமே, உலகம் முழுவதும் காலநிலையை தீர்மானிக்கிறது. எல்-நினோ காரணமாகத்தான் கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் அதிகளவு மழைப்பொழிவு இருந்தது. கிட்டத்தட்ட 123 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. அதேபோல், கடந்த 123 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

நீலகிரி மட்டுமின்றி, கோவையிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கடந்த 1976ம் ஆண்டு கோவையில் 42.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இப்பவும் அதே நிலையை நோக்கி வெப்பநிலை உயர்ந்து வருகிறது. ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. வரும் நாட்களில், தற்போது இருக்கிற வெப்பநிலையைவிட இன்னும் உயரும் வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் ஊட்டியில் இதைவிட அதிக வெப்பநிலை பதிவாகும் வாய்ப்புகள் இல்லை.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் இனி படிப்படியாக வெப்பநிலை குறையும். தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீச துவங்கிவிட்டால், வெப்பநிலை தானாக குறைந்துவிடும். அதற்கான அறிகுறி தற்போது தென்படுகிறது. அதேசமயம், கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும். இப்பகுதியில், காற்று வீசுவது தடுக்கப்படுவதால், சென்னையில் இருந்து குமரி வரை கடலோர மாவட்டங்களில் மே மாதம் அதிகப்படியான வெப்பநிலையை உணர முடியும். ஜூன் மாதமும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

இதுவரை கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகம் இல்லை. ஆனால், இதையே மக்கள் வெயில்…, வெயில்… என்கிறார்கள். இனிதான் வெப்பநிலை அதிகரிக்கும். ஏனெனில், அக்னி நட்சத்திரம் இனிதான் ஆரம்பம் ஆகும். இப்பகுதிகளில், இயல்பைவிட அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்பு அதிகம். இதுவரை பதிவானது ஏப்ரல் மாத வெப்பநிலை ரெக்கார்டுகள்தான். இனி, மே மாத வெப்பநிலை ரெக்கார்டு பதிவாகும். இது, ஏப்ரல் மாதத்தைவிட இன்னும் அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் ஊட்டியில் 2 நாட்களாக பூமியை குளிர்விக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றால் மரங்கள் சாய்ந்தன. பெரும்பாலும் வெயிலை பார்க்காத மக்களுக்கு வெப்பத்தின் கொடூரத்தை காட்டி உள்ளது. 2 நாட்களாக அவ்வப்போது பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பகல் நேரத்தில் எப்போதும் போல் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். இதமான சூழலை அனுப்பவிக்கலாம் என்று வந்த சுற்றுலாபயணிகளும் பரிதவித்து வருகின்றனர்.

* எகிறும் காய்கறி விலை
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழில் மட்டுமே பிரதானமாக இருந்தாலும், இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால், விவசாயிகள் தங்களது விளைநிலங்களை தரிசாக வைத்திருந்து, ஜனவரி மாதம் முதல் விவசாயத்தை ஆரம்பிப்பது வழக்கம்.

அப்படித்தான் இந்த முறையும் விளைநிலங்களில் பயிர்களை பயிரிட்டிருக்கிறார்கள். ஆனால், தற்போது, நீலகிரியில் வழக்கத்துக்கு மாறாக வெயில் கொளுத்தி வருவதால், பசுமையான புல்வெளிகள் காய்ந்துவிட்டன. குளம், குட்டைகள் வறண்டு வருகின்றன. இதனால், தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள விளைபொருட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. தண்ணீர் இல்லாமல், விளைபொருட்கள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளைச்சலும், வரத்தும் குறைந்துவிட்டதால், காய்கறி மண்டிகளில் விலையும் எகிறிவிட்டது.

* ஸ்வெட்டர் போய்… குடை வந்தது…
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்பம் தகிக்கிறது. எப்போதும் குளிராக இருக்கும் ஊட்டியில் கூட இம்முறை வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் உள்ள அணைகள், நீரோடைகள், குளங்கள் அனைத்தும் வற்றி காணப்படுகிறது. கடந்த 73 ஆண்டுகளுக்குப் பிறகு 29.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நீலகிரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இது சுற்றுலா பயணிகளை தவிக்க வைத்துள்ளது. சமவெளி பகுதியில் நிலவும் கோடை தாக்கத்தை தவிர்த்து குளிர்ச்சிக்காக நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள். ஸ்வெட்டர், குல்லா அணிந்து நீலகிரியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை ரசிப்பார்கள்.

ஆனால் தற்போது சமவெளி பகுதியில் உலா வருவதை போல குடைபிடித்துக்கொண்டு நீலகிரியை உலா வரவேண்டிய நிலைக்கு இயற்கை தள்ளியுள்ளது. உள்ளூர் மக்களும் வெம்மை ஆடைகள் இன்றி வலம் வருகின்றனர். அனைத்து வீடுகள் தொழில் நிறுவனங்களில் மின்விசிறிகள் பயன்படுத்தப்படுகிறது. சில வீடுகளில் ஏசி கூட பயன்படுத்தப்படுகிறது. தேநீர் அருந்துவதை தவிர்த்து விட்டு குளிர் பானங்கள் ஐஸ்கிரீம் போன்ற கடைகளுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.

* மலைகளின் இளவரசியில் இதமான சூழல்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் கொடைக்கானலில் மக்கள் குவிந்து வருவதால் தற்போது கோடை சீசன் களைகட்டி வருகிறது. நாளை (மே 7) முதல் கொடைக்கானலுக்கு வந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாகி இருந்தது.

கொடைக்கானலில் நேற்றுமுன்தினம் மாலை காற்றுடன் மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழைக்கு பழநி – கொடைக்கானல் மலைச்சாலையில் வடகவுஞ்சி பகுதியில் சாலையில் மரம் விழுந்தது. இந்த மரம் மின்கம்பி மீது விழுந்ததால் இந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மரத்தை அகற்றினர். இதே சாலையில் சவரிக்காடு அருகே சாலையின் குறுக்கே பாறை உருண்டு விழுந்தது. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.

இதனால், இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் சாரல் மழை பெய்தது. இதையடுத்து மலைப்பகுதியில் நிலவிய வறண்ட சூழல் மாறி இதமான குளுகுளு சூழல் நிலவியது. இந்த மழை காரணமாக மேல்மலைப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயும் முழுமையாக கட்டுக்குள் வந்தது. இரவிலும் இதமான குளிர் சூழல் நிலவி வருகிறது. கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இந்த இதமான சூழலை ரசித்துச் செல்கின்றனர்.

* வெப்பம் அதிகரிக்க காரணம் என்ன?
ஒன்றிய மண்வள ஆராய்ச்சி மைய தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் இம்முறை எங்களது ஆய்வின்படி 26 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது மரங்கள் மற்றும் செடி கொடிகள் இல்லாத பகுதிகளில் மேலும் அதிகமாக காண்பித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் அதிக வாகனங்கள் வந்து செல்வதும், கட்டிடங்கள் அதிகரித்துள்ளதும், தேயிலை தோட்டங்கள் அழிப்பது மற்றும் மரங்களை வெட்டுதல் போன்ற பல்வேறு காரணங்களால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடுவது அவசியம். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். காற்று மாசடைவதை தடுக்க வேண்டும்’’ என்றார்.

The post தகிக்கும் மலைகளின் அரசி: மின்விசிறிகளை தேடும் மக்கள், வறட்சியால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : Queen of the Taki Hills ,Queen of Hills ,Nilgiris district ,Ooty ,Coonoor ,Kudalur ,Bandalur ,Queen of the mountains ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் தொடர் மழையால் மேரிகோல்டு மலர்கள் அழுகின