சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக, 10 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ₹4 கோடி ரொக்கம் கடத்தி சென்ற நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்து தாம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக கடந்த 30ம் தேதி ₹4 கோடியுடன் பிடிபட்ட நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோரிடம் 10 மணி நேரம் விசாரணை நடந்தது. அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் மற்றும் அவரிடம் பணியாற்றும் ஆசைதம்பி, ஜெய்சங்கர் ஆகியோர் உட்பட 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் 10 பேர் அளித்த வாக்கு மூலத்தில் நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவுக்காக ₹4 கோடி பணம் பல இடங்களில் திரட்டி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து சதீஷ், நவீன், பெருமாளிடம் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. அதில் பாஜ தொழில்பிரிவு மாநில தலைவர் கோவர்தன் நடத்தும் ரெஸ்டாரண்டில் இருந்தும் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் ரெஸ்டாரண்ட் உரிமையாளரான பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த கடந்த வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீசார் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரால் பணம் தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாத நிலை இருந்தது.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் உடல் நலம் சரியானதும், ஓரிரு நாளில் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டு வந்தனர்.
இதுவரை சிபிசிஐடி போலீசார் 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி தற்போது பணம் கொடுத்த நபர்களிடம் விசாரணையை தொடங்க உள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு appeared first on Dinakaran.