புதுடெல்லி: உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க அவசர சிகிச்சை பிரிவுகளில்(ஐசியூ) ஏற்படும் மூளை இறப்புகளை கண்காணிக்க மாநிலங்களுக்கு தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. உடல் உறுப்பு தானம் என்பது மனிதர்களிடம் இருந்து ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளை பிரித்தெடுக்கும் ஒரு செயல்முறை. அதன்படி ஒருவர் நோயுற்று உடல் உறுப்பு பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட உறுப்பை மற்றொருவர் தானமாக கொடுக்க முடியும்.
இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு நோய்களால் உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் உடல் உறுப்புகளை எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளனர். ஆனால் உடல் உறுப்பு தானம் செய்வது தொடர்பாக மனிதர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக வடஇந்திய மாநிலங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் மூளைசாவு அடையும் நபர்கள் பற்றி கண்காணிக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் இயக்குநர் டாக்டர் அனில் குமார், “மனித உறுப்புகளின் திசு மாற்று சட்டம் 1994 விதிகளின்படி, அவசர சிகிச்சை பிரிவில் மூளை மரணம் அடைய வாய்ப்புள்ளவர்கள் பற்றி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேலும் அவர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி அளித்துள்ளனரா என்பது பற்றியும், அவ்வாறு இல்லையெனில் இதயம் செயலிழக்கும்முன் உடல் உறுப்புகள் தானம் செய்வது பற்றி அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பணியில் உள்ள மருத்துவர், மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் உதவியுடன் மூளை சாவு குறித்த சான்றளிப்புக்கு பிறகு உறுப்பு தானம் பற்றிய விசாரணையை செய்ய வேண்டும்” என அனைத்து மாநில பிராந்திய மற்றும் மாநில உறுப்பு, திசு மாற்று அமைப்பின் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
The post உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க ஐசியூக்களில் மூளை இறப்புகளை கண்காணிக்க வேண்டும்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.