×
Saravana Stores

பெண் கடத்தப்பட்ட வழக்கில் ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்: நீதிபதி அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீட்டு பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் மஜத எம்.எல்.ஏ எச்.டி.ரேவண்ணா கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் ஹொலெநரசிபுரா எம்.எல்.ஏவும் பிரஜ்வலின் தந்தையுமான ரேவண்ணா ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை நடத்திவருகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ரேவண்ணா வீட்டு பணிப்பெண் கடத்தப்பட்ட நிலையில், அந்த பெண்ணை கடத்திய சதீஷ் போபண்ணாவை கைது செய்த எஸ்.ஐ.டி, கடத்தப்பட்ட பெண் ரேவண்ணா உதவியாளரின் பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து அந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த கடத்தல் வழக்கின் முதல் குற்றவாளியான ரேவண்ணாவை, அவரது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் வீட்டில் வைத்து கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரேவண்ணா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் சனிக்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய எஸ்.ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால், நேற்று மாலை கோரமங்களாவில் உள்ள பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரா கட்டிமணி வீட்டில் அவர் முன் ரேவண்ணாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அப்போது எஸ்.ஐ.டி தரப்பில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. ஒரு நாள் முழுக்க விசாரணை நடத்தப்பட்டதால் இனி விசாரணை நடத்த எதுவுமில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ரேவண்ணாவின் வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு கருத்துகளையும் கேட்ட நீதிபதி, ரேவண்ணாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரேவண்ணா, இது அரசியல் சதி என்றும், தன் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டுகளும் இருந்ததில்லை. இந்த வழக்கிலும் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறினார்.

* பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்ய ஹெல்ப்லைன்
பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு என எஸ்ஐடி அதிகாரிகள் ஹெல்ப்லைனை தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்காக தொடங்கப்பட்ட 6360938947 என்ற எண்ணில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் உதவி எண்ணை அழைத்து புகார் செய்யலாம். இதற்கிடையே, எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே ப்ளு கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் கூறினார்.

The post பெண் கடத்தப்பட்ட வழக்கில் ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்: நீதிபதி அனுமதி appeared first on Dinakaran.

Tags : Revanna ,Bengaluru ,Prajwal Revanna ,Karnataka ,Majda ,MLA ,HD Revanna ,Hassan MP ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!