- ரோஹித் வெமுலா
- காங்கிரஸ்
- ட்விட்டர்
- புது தில்லி
- தெலுங்கானா மாநில
- பாஹியா
- வெமுலா
- அம்பேத்கர் மாணவர் சங்கம்
- தின மலர்
புதுடெல்லி: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா கடந்த 2016ம் ஆண்டு பல்கலைக்கழக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்பேத்கர் மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டதற்காக வெமுலாவின் கல்வி உதவித்தொகையை ஒன்றிய பாஜ அரசு நிறுத்தியது உள்ளிட்ட விவகாரங்களைத் தொடர்ந்து வெமுலாவின் தற்கொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில பாஜ தலைவர்களின் துன்புறுத்தலால்தான் வெமுலா தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் தரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தெலங்கானா போலீசார் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், மாணவர் வெமுலா தலித் சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும், தனது உண்மையான சமூகம் வெளியில் தெரிந்து விடுமோ என அவர் அஞ்சியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெமுலா மரணத்திற்கும் சாதி, பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ரோஹித் வெமுலாவின் மரணம், பாஜவின் தலித் விரோத மனப்பான்மையை அம்பலப்படுத்தியது. அந்த கடினமான நேரத்தில் ராகுல் உள்ளிட்ட ஒட்டுமொத்த காங்கிரசும், வெமுலாவின் குடும்பத்திற்கு ஆதரவாக நின்றது. இந்த விவகாரம் குறித்த தெலங்கானா போலீசாரின் அறிக்கையானது, கடந்த ஆண்டு ஜூன் 23ல் (முந்தைய பிஆர்எஸ் கட்சி ஆட்சியில்) தயாரிக்கப்பட்டது. முந்தைய போலீசாரின் விசாரணையில் பல முரண்பாடுகள் உள்ளன.
எனவே, தெலங்கானாவின் காங்கிரஸ் அரசு வெமுலாவின் குடும்பத்திற்கு நீதியை உறுதி செய்வதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் விட்டு விடாது. மேலும் மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்ததும், சமூக-பொருளாதாரத்தில் பின்தங்கிய எந்த மாணவர்களும் இதுபோன்ற அவலத்தை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக, கல்லூரிகளில் நடக்கும் சாதி மற்றும் வகுப்புவாத அட்டூழியங்கள் குறித்து ரோஹித் வெமுலா சட்டத்தை இயற்றுவோம்’’ என கூறி உள்ளார்.
* தாயார் கதறல்
போலீசார் அறிக்கையை நிராகரித்துள்ள வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா தனது மகன் பட்டியலின சாதியை சேர்ந்தவர் என்றும் அவர் நன்றாக படிக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அறிக்கையில் இருப்பது தவறானது என்றும் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் தங்களுக்கு நீதி பெற்று தர வேண்டுமென தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேற்று முன்தினம் சந்தித்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்துவதாக தெலங்கானா டிஜிபி ரவி குப்தா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
The post நீதியை உறுதி செய்வோம் ரோஹித் வெமுலா மரணம் குறித்த விசாரணையில் சந்தேகம் உள்ளது: காங்கிரஸ் டிவிட்டரில் கருத்து appeared first on Dinakaran.